ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நோய்வாய்ப்பட்ட மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் பிரிவுபசார விழாவில் அவருடைய கண்முன்னே மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த தேவேந்திர சண்டால் என்பவர் கோட்டா நகரின் மத்திய கிடங்கு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி தீபிகா (வயது 50). இவர் கடந்த சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். மனைவியின் நிலையை உணர்ந்த தேவேந்திர சண்டால் அவரை அருகில் இருந்து கவனித்துகொள்ள விரும்பியிருக்கிறார். பணி ஓய்வுபெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் அவர் விருப்ப ஓய்வு பெற்றார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் தேவேந்திர சண்டாலுக்கு பிரிவுபசார விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர். அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் மனைவியுடன் தேவேந்திர சண்டால் கலந்து கொண்டார். தம்பதியினர் இருவருக்கும் சக ஊழியர்கள் மாலைகளை அணிவித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்.,
அப்போது ஊழியர்கள் மேஜையை சுற்றி நின்று கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த தம்பதியினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது திடீரென தீபிகா நாற்காலியில் சோர்வாக அமர்ந்தாா். அவருக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. இதைப்பார்த்த தேவேந்திர சண்டால் மனைவி முதுகில் தட்டி கொடுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக தீபிகா மேஜையில் மயங்கி சரிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் ஊழியர்கள் தண்ணீர் கொண்டு வாருங்கள் என கண்ணீருடன் கேட்டார்கள். மேலும் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனைவியின் உடலை பார்த்து உனக்காக விருப்ப ஓய்வு பெற்றேன், ஆனால் என்னை தவிக்கவிட்டு போய் விட்டாயே என தேவேந்திர சண்டால் கதறி அழுதது சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கண்ணீரை வரவழைத்தது. மனதை கரைய வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேவேந்திர சண்டாலும், தீபிகாவும் கழுத்தில் மாலையுடன் சிரித்த முகத்துடன் இருப்பதும், சிறிது நேரத்தில் தீபிகா மேஜையில் மயங்கி விழும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.