ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலையில், 20 பள்ளிகளை கட்டலாம்.. ஆனால் நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா? பாதுகாப்பு இருந்தால் தான் பள்ளியே செயல்படும்..!

ஒரு நாட்டின் பாதுகாப்பு துறை செலவினம் என்பது தேவையற்ற வீண் செலவு அல்ல; அது அமைதியையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான ஒரு அத்தியாவசிய முதலீடு என்று இந்தியாவின் பாதுகாப்பு செலவின குறித்து பொருளாதார ஆய்வாளர்கள்…

school

ஒரு நாட்டின் பாதுகாப்பு துறை செலவினம் என்பது தேவையற்ற வீண் செலவு அல்ல; அது அமைதியையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான ஒரு அத்தியாவசிய முதலீடு என்று இந்தியாவின் பாதுகாப்பு செலவின குறித்து பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு நாட்டில் அமைதியான சூழல் இருந்தால்தான் அந்த நாட்டில் பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் வளர்ச்சி சாத்தியமாகும். எனவே, ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்கான செலவு, அந்நாட்டின் அரசின் முதன்மை பொறுப்பாக கருதப்படுகிறது.

பாதுகாப்புச் செலவினம் ஓர் காப்பீட்டு பிரீமியம்

பாதுகாப்பு செலவினம் என்பது ஒரு விரும்பத்தகாத நிகழ்வான போரை தடுப்பதற்காக செலுத்தப்படும் ஒரு காப்பீட்டு பிரீமியத்தைப்போன்றது. பலவீனமாக இருக்கும் ஒரு நாடு, மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எளிதாக இலக்காகும். இதற்கு உக்ரைன் சிறந்த எடுத்துக்காட்டாகும். தனது பாதுகாப்பு துறையை புறக்கணித்ததால், ஒரு வருட கால போருக்குப் பின் அதன் புனரமைப்பு செலவு $400 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, போதுமான பாதுகாப்பு செலவினம் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தி

பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்படும் நிதி ஒருபோதும் வீணாவதில்லை. ஏனெனில், அந்த நிதி உள்நாட்டு பொருளாதாரத்திற்குள்ளேயே மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. அரசு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் போது, அந்த பணம் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு பயனளிக்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு உந்துசக்தியாக செயல்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் எல்&டி போன்ற பாதுகாப்பு துறை நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட உயர்வு இதற்கு சிறந்த சான்றாகும்.

‘மேக் இன் இந்தியா’ மற்றும் தேசிய பாதுகாப்பு

‘மேக் இன் இந்தியா’ கொள்கையும் உள்நாட்டு உற்பத்தித் திட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், அவை பாதுகாப்புக்கான நிதியை வெளிநாடுகளுக்குச் செல்லவிடாமல், நாட்டின் சொந்தத் தொழில்துறையிலேயே புழங்க உதவுகின்றன. தேசிய பாதுகாப்பு என்பது ஆயுதப்படைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது எல்லையில் இருக்கும் சிப்பாயிலிருந்து, தகவல் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் விவசாயிகள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சி.

“ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலையில், 20 பள்ளிகளை கட்டி, அவற்றை ஒரு வருடம் நடத்த முடியும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வது என்பது, அதன் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். மேலும், அமைதி இல்லாத நிலையில் பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் பிற சமூக மேம்பாடுகள் சாத்தியமில்லை. எனவே பாதுகாப்பு செலவு என்பது ஒரு நாட்டின் நீண்டகால நலன்களுக்கான ஒரு முக்கிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.