அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்ததை தொடர்ந்து, இந்தியாவுக்கான அஞ்சல் துறை, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகை அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இன்று அறிவித்துள்ளது.
டிரம்ப்பின் உத்தரவும் அதன் தாக்கமும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூலை 30 அன்று பிறப்பித்த உத்தரவில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் $800 மதிப்பு வரையிலான பொருட்களுக்கான வரி விலக்கு ஆகஸ்ட் 29 முதல் நீக்கப்படும். இதன் விளைவாக, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கும் சுங்க வரி விதிக்கப்படும். இருப்பினும், $100 வரையிலான பரிசு பொருட்களுக்கு மட்டும் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அஞ்சல் துறை எடுத்த நடவடிக்கை
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP), அஞ்சல் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை வசூலித்து அனுப்புவதற்கான வழிமுறைகளை ஆகஸ்ட் 15, 2025 அன்று வெளியிட்டது. ஆனால், இந்த வழிமுறைகள் போதுமானதாக இல்லை என்றும், வரி வசூலிக்கும் செயல்முறைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்றும் இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவுக்கு அஞ்சல் பொருட்களை ஏற்றி செல்லும் விமான நிறுவனங்கள், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு தயார்நிலை இல்லாத காரணத்தால், சரக்குகளை ஏற்க மறுத்துள்ளன. இதனால், அஞ்சல் துறை ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், $100 வரையிலான பரிசு பொருட்கள் வழக்கம்போல் அனுப்பப்படும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட முடியாத அஞ்சல் பொருட்களுக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறலாம் எனவும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்த சிக்கலை தீர்க்க அனைத்து தரப்பினருடனும் அஞ்சல் துறை இணைந்து செயல்பட்டு வருவதாகவும், விரைவில் சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
