30 நாட்கள் சிறையில் இருந்தால் 31வது நாளில் பதவி நீக்கம்.. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும்.. வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் இன்று தாக்கல்..! ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி ஆப்பு..!

இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று முக்கிய சட்ட மசோதாக்களை மக்களவையில் இன்று தாக்கல் செய்யவுள்ளார். இந்த மசோதாக்கள், பிரதமர், முதலமைச்சர்கள், மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றவியல் வழக்குகளில்…

jail

இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று முக்கிய சட்ட மசோதாக்களை மக்களவையில் இன்று தாக்கல் செய்யவுள்ளார். இந்த மசோதாக்கள், பிரதமர், முதலமைச்சர்கள், மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றவியல் வழக்குகளில் ஒரு புதிய சட்ட விதியை சேர்க்கின்றன.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

மத்திய அரசு கொண்டு வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்களின்படி, ஒரு பிரதமர், முதலமைச்சர் அல்லது எந்தவொரு மாநில அமைச்சரும், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், அவர் தனது பதவியை இழப்பார்.

மசோதாவின்படி, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் அல்லது பிரதமர் 31-வது நாளில் தானாகவே பதவி விலக வேண்டும். அவர் அவ்வாறு செய்யத் தவறினால், அந்த 31-வது நாளிலிருந்து அவருடைய பதவி நீக்கப்படும். இந்த விதி மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கும், மாநில அமைச்சரவைகளில் உள்ள அமைச்சர்களுக்கும் பொருந்தும்.

மத்தியில் உள்ள அமைச்சரை குடியரசுத் தலைவர், பிரதமரின் ஆலோசனைப்படி நீக்குவார். அதேபோல், மாநிலத்தில் உள்ள அமைச்சரை ஆளுநர், முதல்வரின் ஆலோசனைப்படி நீக்குவார்.

இந்த மசோதாக்களின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பதாகும். கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, காவலில் வைக்கப்படும் ஒரு அமைச்சர் பதவியில் நீடித்தால், அது அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்து, நல்லாட்சிக்கு தடையாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களின்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்றால் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படுவார். தண்டனை உறுதியாகும் வரை அவர் பதவியில் நீடிக்க முடியும். ஆனால், இந்த புதிய மசோதா தண்டனை உறுதியாவதற்கு முன்பே காவலில் இருக்கும் காலத்தைக் கணக்கில் கொள்கிறது.

சமீபத்தில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக காவலில் இருந்தபோது, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் நீடித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதேபோல், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட கைது செய்யப்பட்ட பிறகு பதவி விலக மறுத்தார். இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்யவுள்ள இந்த மூன்று மசோதாக்கள் பின்வருமாறு:

அரசியலமைப்பு மசோதா, 2025: இது பிரதமர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு பொருந்தும்.

யூனியன் பிரதேசங்களுக்கான மசோதா, 2025: இது டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கானது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2025: இது ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கானது.

இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டவுடன், அவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் விவாதிக்கப்படுகிறது.