ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கர தீவிரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அசாமின் எதிர்க்கட்சியான AIUDF கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஹிமந்தா சர்மா மேலும் கூறியபோது,‘பெஹல்காம் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தொடர்புடையதென கூறப்படும் சூழ்நிலையில், அந்த எம்எல்ஏ ஒரு வீடியோவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதை பார்த்தோம். உடனடியாக காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக டிஜிபி எனக்கு தகவல் வழங்கினார். நீதிமன்றத்தில் எம்எல்ஏவை ஆஜர்படுத்துவோம்; வழக்கை சட்டப்படி கொண்டு செல்வோம்’ என்று கூறினார்.
மேலும் ‘பெஹல்காம் தாக்குதலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது சுதந்திரமான கருத்து அல்ல, இந்தியாவின் ஆத்மாவிற்கு எதிராக நிற்கும் செயல். குற்றவாளிகள் இந்த இதுபோன்ற தாக்குதலுக்கு நியாயம் காண முயற்சிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இங்கே இடமில்லை,” எனக் கடுமையாக எச்சரித்தார்.
அந்த எம்எலேவுக்கு எதிராக நாகான் சாதர் காவல் நிலையத்தில் பாரதீய ந்யாய சன்ஹிதா சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் AIUDF கட்சி தலைவர் பத்ருதீன் அஜ்மல், தங்கள் கட்சி எம்எல்ஏவின் கருத்துகளுக்கு விளக்கமளித்தபோது, “அமினுல் இஸ்லாம் கூறிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்து. கட்சியின் நிலைப்பாடு அல்ல,” என தெரிவித்தார்.
மேலும் அவருடைய கருத்து மிகவும் வருத்தமளிக்கும் கண்டிக்கத்தக்கது என்றும், இந்த நேரத்தில் நாமெல்லாம் நமது அரசுடன் நிற்கவேண்டும். தீவிரவாதிகளுக்கு மதமில்லை. இவர்கள் இஸ்லாத்தை மோசமாக காட்டுகிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.