பெருநகரங்களில் பார்க்கிங் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. சென்னையில் சமீபத்தில் “பார்க்கிங் வசதி இல்லை என்றால் கார் வாங்க கூடாது” என்ற உத்தரவை பிறப்பிக்கப்படும் அளவிற்கு, இந்த பிரச்சனை மோசமாக உருவெடுத்துள்ளது.
இந்த சூழலில், பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காண இரண்டு இளைஞர்கள் “Park Mate” என்ற நிறுவனத்தை தொடங்கி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பார்க்கிங் செய்பவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். பரத்வாஜ், அபிமன்யு சிங் ஆகிய இருவரும் இணைந்து இந்த நிறுவனம் மூலம் புதுமையான சேவைகளை வழங்கி வருகின்றனர்.
Park Mate ஆப் மூலம், நாம் செல்லவிருக்கும் இடத்தில் பார்க்கிங் வசதி தேவை என முன்பதிவு செய்யலாம். அந்த இடத்துக்குச் சென்றவுடன் Park Mate பணியாளர்கள் உங்கள் காரை வாங்கி பாதுகாப்பாக நிறுத்தி வைத்து விடுவார்கள். பிறகு, எப்போது வேண்டுமானாலும் உங்கள் காரை திரும்ப பெறலாம்.
GPS மூலம், உங்கள் கார் எங்கு உள்ளது, எந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் கண்டறியும் வசதி உள்ளது. மேலும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம், காரின் லைசென்ஸ், நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து, வாகன நுழைவு பதிவு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தினால், உங்கள் பார்க்கிங் பிரச்சனை தீர்ந்துவிடும்.
இந்நவீன சேவையின் மூலம், “காரை எங்கே நிறுத்துவது?” என்ற கவலையின்றி, Park Mate உங்கள் காரை உங்கள் சார்பாக நிறுத்திவிடும். அதே நேரத்தில், நீங்கள் தேவையான நேரத்தில் காரை திருப்பி வழங்கிவிடுவார்கள்.
தொடக்கத்தில், இது ஒரு சவாலான தொழிலாக இருந்ததாகவும், அதிகாரிகள் உட்பட பலரிடம் அனுமதி பெற வேண்டி இருந்ததாகவும், ஆனால் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் இந்த இரண்டு இளைஞர்கள் கூறியுள்ளனர்.
தற்போது, டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ ஆகிய நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில், மும்பை, ஹைதராபாத், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் தனது சேவையை விரிவாக்க திட்டமிட்டிருப்பதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இனிமேல், வீட்டிலிருந்து கிளம்பும்போதே, செல்லும் இடத்தில் பார்க்கிங் வசதி தேவை என ஆப்பில் ஒரு உத்தரவு கொடுத்தால் போதும். பார்க்கிங் பிரச்சனை இனி காற்றாக மறைந்துவிடும்!