PAN 2.0 என்பது மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான நிரந்தர கணக்கு எண் (PAN) அமைப்பின் புதிய பதிப்பாகும். வருமான வரித் துறை இதை முறையாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பு பாதுகாப்பை மேம்படுத்தி, PAN விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்துகிறது.
QR குறியீடுடன் கூடிய e-PAN கார்டுகள் மோசடி தடுப்பு உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட சிறப்புக்கு உரியது. e-PAN இலவசமாக டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும், ஆனால் காகித PAN அட்டையை விரும்புவோர் கட்டணம் செலுத்த வேண்டும். இருந்தாலும், QR குறியீடு இல்லாத பழைய PAN அட்டைகள் செல்லுபடியாகும். புதிய கார்டை கட்டாயமாக பெற்று கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
உங்களுக்கு PAN 2.0 அட்டை தேவைப்படுகிறதா? அல்லது டிஜிட்டல் பதிப்பைப் பெற விரும்புகிறீர்களா? இதோ, ஆன்லைனில் விண்ணப்பித்து மின்னஞ்சல் மூலம் உடனடியாக பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.
முதலில், உங்கள் PAN அட்டையின் பின்புறம் பார்க்கவும். அதில் PAN NSDL அல்லது UTIITSL மூலம் வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், இந்த இரண்டு நிறுவனங்களும் தனித்தனியான PAN சேவைகள் வழங்குகின்றன.
NSDL வழியாக e-PAN பெறுவது எப்படி?
NSDL e-PAN அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தேவையான விவரங்களை உள்ளிடவும் . உங்கள் PAN எண், ஆதார் எண் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்யவும். நீங்கள் வழங்கிய தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி, கொள்ளவும். அதன்பின் OTP-ஐ பெற விரும்பும் முறையை தேர்வு செய்து, ஓடிபி எண்ணை 10 நிமிடங்களில் உள்ளிடவும். செயல்முறை முடிந்ததும் 30 நிமிடங்களில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு e-PAN அனுப்பப்படும்.
UTIITSL வழியாக e-PAN பெறுவது எப்படி?
UTIITSL e-PAN அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். PAN எண், பிறந்த தேதி, காட்சிப் பாதுகாப்பு குறியீடு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும். மின்னஞ்சல் பதிவு செய்யப்படவில்லை என்றால், PAN 2.0 முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு புதுப்பிக்கலாம். செயல்முறை முடிந்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு PDF வடிவில் e-PAN அனுப்பப்படும்.
PAN 2.0-இன் முக்கிய அம்சங்கள்
முந்தைய PAN வைத்திருப்போர் மாற்றம் செய்ய தேவையில்லை – QR குறியீடு இல்லாத பழைய PAN அட்டைகள் செல்லுபடியாக இருக்கும்.
e-PAN (டிஜிட்டல் பதிப்பு): 30 நாட்களுக்குள் முதல் 3 முறைகள் இலவசம்; அதற்கு பிறகு ₹8.26 கட்டணம்.
பான் கார்டு முகவரிக்கு அனுப்ப வேண்டுமெனில் உள்நாட்டு அனுப்பலுக்கு ₹50, சர்வதேச அனுப்பலுக்கு ₹15 + அஞ்சல் கட்டணம்.
மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை இலவசமாக புதுப்பிக்கலாம். புதிய PAN 2.0 அட்டையில் QR குறியீடு வழங்கப்பட்டிருப்பதால், அடையாள உறுதிப்படுத்தல் விரைவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
உங்கள் பழைய PAN அட்டை செல்லுபடியாகவே இருக்கும். எனவே, கட்டாயமாக மாற்ற தேவையில்லை. ஆனால், உங்களிடம் பழைய வெள்ளை நிற PAN அட்டை அல்லது QR குறியீடு இல்லாத PAN இருந்தால், புதுப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.