‘மன்னிப்பு’.. இந்தியாவுக்கு பிடிக்காத வார்த்தை.. இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டுமா? அதுக்கு வேற ஆள பாரு.. டிரம்ப் நண்பருக்கு பதிலடி கொடுத்த சசி தரூர்.. காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரே மனசாட்சி உடையவர்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வலதுகரமாக அறியப்படும் லூட்னிக் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர் மிக கடுமையாக பதிலளித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தால் இந்தியா மீது விதிக்கப்பட்ட வர்த்தக தடைகள்…

sasi tharoor

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வலதுகரமாக அறியப்படும் லூட்னிக் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர் மிக கடுமையாக பதிலளித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தால் இந்தியா மீது விதிக்கப்பட்ட வர்த்தக தடைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ள தரூர், இந்தியா எந்தவிதத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால், இந்தியா தனது தேசிய நலன் கருதி ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இது குறித்து ஷஷி தரூர் பேசும்போது, “இந்த விஷயத்தில் இந்தியா மிகுந்த முதிர்ச்சியுடன் நடந்துகொண்டது. உலகளாவிய எண்ணெய் விலையை நிலைநிறுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, முந்தைய அமெரிக்க நிர்வாகங்களே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டதை மறந்துவிட வேண்டாம்” என்று சுட்டிக்காட்டினார்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் விஷயத்தில் இந்தியாவை மட்டும் தனிமைப்படுத்துவது நியாயமற்றது என்று தரூர் குறிப்பிட்டார். “ரஷ்யாவிடமிருந்து இந்தியாவை விட அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை சீனாவும் துருக்கியும் வாங்குகின்றன. ஐரோப்பா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கவில்லை என்றாலும், பிற ரஷ்ய பொருட்களை இறக்குமதி செய்து, ரஷ்யாவின் கருவூலத்திற்கு நம்மை விட பல பில்லியன் டாலர்களை அளிக்கின்றன. எனவே, ரஷ்யாவின் போருக்கு நிதியுதவி அளிப்பதாக இந்தியாவை மட்டும் தனியாக குறிவைப்பது விசித்திரமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா மீது விதித்த 50% வர்த்தக வரிகள் வெறும் வர்த்தக போர் மட்டுமல்ல, அது இந்திய பொருளாதாரத்தில் உண்மையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதை ஷஷி தரூர் சுட்டிக்காட்டினார். சூரத் நகரில் உள்ள வைரம் மற்றும் நகைத் தொழில், திருப்பூரின் ஆடைத் தயாரிப்பு தொழில், விசாகப்பட்டினத்தின் கடல் உணவு மற்றும் இறால் ஏற்றுமதி ஆகிய துறைகளில் இந்தத் தடைகளால் பாதிப்பு ஏற்பட்டு, பல நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப்பின் “சிறந்த நண்பன்” போன்ற புதிய தொனி வரவேற்கத்தக்கது என்றாலும், அதை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று ஷஷி தரூர் வலியுறுத்தினார். “ட்ரம்ப்பின் பேச்சுகளும், அவரது நிர்வாகத்தின் செயல்பாடுகளும் நமது நாட்டில் சில காயங்களையும் புண்படுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ளன. இதனால், இந்தியாவின் உணர்வு சற்று காயமடைந்துள்ளது, அது ஆற வேண்டும். அமெரிக்க அரசின் கொள்கையில் ஏற்பட்ட ஒரு தவறு இது. இரு தரப்பு அரசுகளும், ராஜதந்திரிகளும் உறவை சரிசெய்ய தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்க அதிபருடன் கலந்து கொள்ள இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து தன் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்.

“ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்ற முறையில், அமெரிக்கா தனது முடிவுகளை எடுக்கலாம். அதேபோல, இந்தியாவும் தனது முடிவுகளை எடுக்கும். அதற்காக நாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா மன்னிப்பு கேட்கும் என்று நான் ஒரு இந்திய அரசியல்வாதியாக எதிர்பார்க்கவில்லை” என்று ஷஷி தரூர் தெரிவித்தார்.