ஐடி துறையில் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், சுமார் 4 முதல் 5 லட்சம் பணியாளர்கள் பணிநீக்க அபாயத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்காவின் நடவடிக்கை மட்டும் காரணம் அல்ல, செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி மயமாக்கல் (Automation) தொழில்நுட்பங்களின் அதிகரித்த பயன்பாடு, பணியாளர்களின் தற்போதைய திறன்களுக்கும், வாடிக்கையாளர்களின் புதிய தேவைகளுக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்கியிருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பணிநீக்கத்திற்கான முக்கியக் காரணங்கள்
குறிப்பாக, 4 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பணியாளர்கள் இந்த அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இவர்களுடைய திறன்கள், AI மற்றும் ஆட்டோமேஷன் சார்ந்த நவீன தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப இல்லாததே முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
வாடிக்கையாளர்கள், அதே பணியாளர்களை கொண்டு அதிக வேலைகளை செய்து முடிக்க வேண்டும் அல்லது குறைந்த பணியாளர்களை கொண்டு அதே வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கோருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி மயமாக்கல் தொழில்நுட்பங்கள், குறைந்த செலவில் அதிக உற்பத்தித்திறனை அளிக்கின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றனர்.
இந்த பணிநீக்கங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள அனுபவமிக்க பணியாளர்களை பெரிதும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தகவல் தொழில்நுட்பத்துறை முழுவதும் ஒருவித பதற்றத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலை இதனுடன் தொடர்புடைய மற்ற துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சில வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கும் ஒரு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று சிலர் கருதுகின்றனர். அதே சமயம், இது திறமையான பணியாளர்களுக்கான போட்டித்தன்மையை அதிகரித்து, ஊதியத்தை குறைக்கவும் வழிவகுக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சமீபத்தில் பணிநீக்க அறிவிப்பை அறிவித்தபோது நாடே அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அதை விட பெரிய ஆபத்து இன்னும் 3 ஆண்டுகளில் இருப்பதாகவும், சுமார் 5 லட்சம் ஐடி ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து என கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
