லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் தனது கிளைகள் வரும் வார இறுதி நாட்களான 29, 30 மற்றும் மார்ச் 31 (திங்கள்) அன்று திறந்திருக்குமென அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வரும் திங்கட்கிழமை ரம்ஜான் பொது விடுமுறை ஆக இருந்தாலும், பாலிசி வைத்திருப்பவர்கள் தங்கள் பிரீமியங்களை தடையின்றி செலுத்துவதற்கு இது உதவியாக இருக்கும்.
LIC தனது வெவ்வேறு மண்டலங்கள் மற்றும் பிரிவுகளின் கீழ் உள்ள அலுவலகங்கள் மார்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அதிகாரசபை (IRDAI) வெளியிட்ட ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31 அன்று எல்லா வங்கிகளும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது, ஆண்டிறுதி அரசு பரிவர்த்தனைகளை சரியான முறையில் செயல்பட உதவும். வங்கிகள், LIC மட்டுமின்றி வருமான வரி மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) அலுவலகங்களும் மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை திறந்திருக்கும். ரம்ஜான் கொண்டாட்டங்கள் அல்லது வழக்கமான வார இறுதி விடுமுறைகள் இதற்கு தடையாக இருக்காது.
இந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச் வரை நிதியாண்டு கணக்கீடு நடத்தப்படும். இதனால், மார்ச் மாதத்தின் இறுதி நாட்கள் வணிகங்கள், வரிவசூல், நிதி நிறுவனங்களுக்கு மிக முக்கியமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.