ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உறுதியான செய்தியை முன்வைத்தார். “பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டும்” என்று அவர் பிரகடனம் செய்தார்.
பயங்கரவாதத்திற்கு எந்த நியாயப்படுத்தலும், கண்டும் காணாமல் இருப்பதும், வெள்ளையடிப்பதும் இருக்க முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிராகத் தன் மக்களை பாதுகாக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு, அதை நாங்கள் பயன்படுத்துவோம். பயங்கரவாதத்திற்கு சகிப்புத்தன்மை காட்டுவதற்கு சிறிதும் இடமில்லை என்றும் அவர் SCO தலைவர்களிடம் தெரிவித்தார்.
மூன்று நாள் ரஷ்ய பயணமாக மாஸ்கோ வந்தடைந்த ஜெய்சங்கர், SCO உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும், அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புது டெல்லிக்கு வரவிருக்கும் நிலையில், பல உயர்மட்ட பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபடுகிறார்.
முன்னதாக அமைச்சர் ஜெய்சங்கர், மாஸ்கோ வந்தவுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார். இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய சிக்கல்கள் குறித்து பேசியதில், SCO, பிரிக்ஸ், ஐ.நா மற்றும் ஜி20 அமைப்புகளில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது பேசிய ஜெய்சங்கர், உக்ரைன் போர், மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட சிக்கலான உலகளாவிய சூழல் குறித்து, இரு நாடுகளின் உறவின் சிறப்பை குறிக்கும் வகையில் வெளிப்படையான கருத்துக்களை பரிமாறிக்கொள்வது முக்கியம் என்றார்.
மோதலை விரைவில் நிறுத்துவதும், நீடித்த அமைதியை உறுதி செய்வதும் முழு சர்வதேச சமூகத்தின் நலன்களுக்கு மிகவும் அவசியம்” என்று கூறிய ஜெய்சங்கர், சமீபத்திய சர்வதேச அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியா-ரஷ்யா உறவு சர்வதேச உறவுகளில் நீண்ட காலமாக ஸ்திரத்தன்மைக்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது என்று அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த உறவின் தொடர்ச்சியான வளர்ச்சி இரு நாடுகளுக்கும் நன்மை பயப்பதுடன், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
