பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அபார வெற்றி, பீகார் மாநில அரசியலில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடும், அதன் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறையும் தற்போது கட்சிக்குள்ளும் வெளியேயும் கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
பிகாரில் NDA கூட்டணி மிக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான மகா கூட்டணி வெறும் சொற்பமான இடங்களிலேயே முன்னிலை வகித்தது. அரசியல் விமர்சகர்கள், “பிகாரில் எதிர்க்கட்சி இருந்தது என்று சொல்வதற்கே வழியில்லை” என்று கூறும் அளவுக்கு மகா கூட்டணியின் தோல்வி கடுமையானதாக உள்ளது. இது ‘டஃப் பைட்’ அல்ல; எதிர்த்து போராடி தோல்வி அடைந்திருந்தால் கூட பரவாயில்லை, மாறாக ஒட்டுமொத்தமாகத் துடைத்து அழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்ட பல தொகுதிகளில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பதன் மூலம், வாக்காளர்கள் அவரை தலைவராக நம்பவில்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. தேர்தலில் ஏற்படும் தோல்விகளுக்கு பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் வாக்கு திருட்டு என்று குறை சொல்லி, ‘ குற்றச்சாட்டுகளை வைப்பது காங்கிரஸின் வாடிக்கையாகிவிட்டது.
மூத்த அரசியல் நோக்கர்கள், “வாக்குத் திருட்டு என்று சொல்லிவிட்டு தோல்விக்கு கட்சித் தலைமை பொறுப்பேற்காமல் இருக்க முடியாது” என்று ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைமையைச் சாடுகின்றனர். தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல், இயந்திரத்தின் மீது பழியை போடுவது, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான முயற்சி என்று விமர்சிக்கப்படுகிறது.
பிகார் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, இது சிறிய அரசியல் மாற்றமல்ல, மாறாக எதிர்க்கட்சிகளின் ஆதரவு தளத்தை மொத்தமாக அடித்து செல்லும் ஒரு “சுனாமி” போன்ற விளைவை ஏற்படுத்தியுள்ளது. இது வாக்கு திருட்டால் ஏற்பட்டதல்ல, ஆளுங்கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையாலும், எதிர்க்கட்சியின் மீதான நம்பிக்கை இன்மையாலும் ஏற்பட்டது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி தனது தோல்விக்கான காரணங்களை ஆழ்ந்து ஆராய வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே பல மூத்த தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். தேர்தலுக்கு முன் சரியான முறையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாதது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு விட்டு கொடுத்தது போன்ற முடிவுகளில் ஏற்பட்ட பிழைகள் தோல்விக்கு வழிவகுத்தன.
நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, பணவீக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், அதிகப்படியான விமர்சனங்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் மட்டுமே முன்வைப்பது மக்களை ஈர்க்கவில்லை.
தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பிலும், அதன் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் பாணியிலும் “எங்கேயோ பெரிய ஓட்டை” இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஓட்டையை சரிசெய்யாவிட்டால், எதிர்காலத்தில் பாஜக சொல்வது போல் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
