ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முக்கிய முடிவின்படி, தற்போதுள்ள நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி. விகிதங்கள் நீக்கப்பட்டு, ஐந்து சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு முக்கிய அடுக்குகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது சாமானிய மக்களின் அன்றாட பொருட்களின் விலையை குறைத்து, நுகர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாற்றங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும்.
சாமான்ய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படுகிறது.
ஐந்து சதவிகித ஜி.எஸ்.டி.: முடி எண்ணெய், சோப்பு, ஷாம்பூ, டூத் பிரஷ், பற்பசை, மிதிவண்டிகள், சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், சலவை சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 12% அல்லது 18% ஜி.எஸ்.டி. விகிதம், தற்போது ஐந்து சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பூஜ்யம் சதவிகித ஜி.எஸ்.டி. (வரவிலக்கு): இனிமேல் ரொட்டி, சப்பாத்தி, புரோட்டா போன்ற அனைத்து இந்திய ரொட்டி வகைகளும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல், அல்ட்ரா ஹை டெம்பரேச்சர் பால் மற்றும் பனீர் ஆகியவற்றுக்கும் பூஜ்யம் சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகள் நிறைவேறும்:
28 சதவிகித ஜி.எஸ்.டி.யிலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்:
ஏர் கண்டிஷனர் மற்றும் தொலைக்காட்சிகள்: அனைத்து ஏசி மற்றும் 32 அங்குலத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சிகள், இப்போது 18 சதவிகித ஜி.எஸ்.டி.க்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம், அனைத்து தொலைக்காட்சி மாடல்களும் 18 சதவிகித வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மகிழுந்து மற்றும் இருசக்கர வாகனங்கள்: சிறிய ரக கார்கள் மற்றும் 350சிசி அல்லது அதற்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது.
பிற பொருட்கள்: பாத்திரங்களைக் கழுவும் இயந்திரங்கள், பேருந்துகள், லாரிகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து கார் உதிரி பாகங்களுக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி.யை நிர்ணயித்து ஒரே சீரான வரி விகிதம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வேளாண், சுகாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ஆதரவு
வேளாண் துறை: டிராக்டர்கள், வேளாண் இயந்திரங்கள், உழவு மற்றும் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் ஜி.எஸ்.டி. 12% முதல் 5% வரை குறைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம்: 33 உயிர்காக்கும் மருந்துகள் 12% ஜி.எஸ்.டி.யிலிருந்து பூஜ்யம் சதவிகிதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான மூன்று முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் ஜி.எஸ்.டி. 5% முதல் பூஜ்யம் சதவிகிதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கண் கண்ணாடி மற்றும் கண்பார்வை திருத்துவதற்கான கண்ணாடிகளின் ஜி.எஸ்.டி. 28% இலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: சூரிய சக்தி அடுப்புகள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள், சூரிய தகடுகள், காற்றாலைகள் மற்றும் உயிர் வாயு ஆலைகள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களுக்கான ஜி.எஸ்.டி. 12% முதல் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய 40 சதவிகித ஜி.எஸ்.டி. அடுக்கில் ஆடம்பரப் பொருட்கள்
பான் மசாலா, குட்கா, சிகரெட், புகையிலை பொருட்கள், இனிப்பு மற்றும் சுவையூட்டப்பட்ட கார்பனேட்டட் பானங்கள், 350 சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள், பெரிய கார்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்களுக்கு விதிவிலக்கு: பான் மசாலா, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதங்கள் தற்போதுள்ள 28% + இழப்பீட்டு செஸ் என்ற விகிதத்திலேயே தொடரும். அரசு கடன் மற்றும் வட்டிப் பொறுப்புகளை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை இந்த விகிதங்களில் மாற்றம் இருக்காது.
காப்பீட்டுச் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு
காப்பீட்டுச் சேவைகளை சாமானியர்களுக்கு கிடைக்கச் செய்ய, தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவக் காப்பீடு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
