2025-ஆம் ஆண்டில் உலக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உலக நாடுகள் ஒன்றோடொன்று வேகமாக இணைந்து, போட்டி மனப்பான்மையுடன் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கின்றன.
அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா ஏன் நிற்கிறது? கோபத்தாலோ அல்லது போட்டியாலோ அல்ல. இந்தியா ஒருபோதும் பின்தொடரும் நாடாக மட்டும் இருக்க முடியாது. அது தனது சொந்த பலம், நம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் உலக அரங்கில் தனக்கென ஒரு குரலை எழுப்பியுள்ளது. இது, வெறுமனே ஒரு மோதலுக்கான நிலைப்பாடு அல்ல, மாறாக முதிர்ச்சியின் அடையாளம்.
இந்தியா பல ஆண்டுகளாக தனது நிறுவனங்களை சீர்திருத்தி, முதலீடு செய்து, மாற்றியமைத்துள்ளது. அதன் விளைவாக, அது ஒரு புதிய வலிமையுடன் உலக அரங்கில் நிற்கிறது. இந்த மாற்றம் ஒரே இரவில் நிகழவில்லை. இது ஆண்டாண்டு காலமாக படிப்படியாக கட்டமைக்கப்பட்டது.
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு, மிகவும் லட்சியமான வரி சீர்திருத்தத்தை அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரிகளைக் குறைத்து, உள்நாட்டு தொழில்களை போட்டித்தன்மை மிக்கதாக மாற்றினார். இது, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என்பதை தெளிவுபடுத்துகிறது.
டிரம்பின் நிர்வாகம் இந்திய ஏற்றுமதிகள் மீது 50% வரை அதிக வரிகளை விதித்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் வர்த்தக பதற்றத்தை உருவாக்கியது. ஆனால், இந்தியா பின்வாங்கவில்லை. பிரதமர் மோடி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றும்போது, இந்திய விவசாயிகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்க எந்த விலை கொடுத்தும் உறுதியாக நிற்போம் என்று அறிவித்தார்.
இந்தியா, தனது நீண்டகால நலன்களில் சமரசம் செய்யாது என்பதை இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. இது, அமெரிக்காவுடனான கூட்டாண்மையை நிராகரிப்பது அல்ல. மாறாக, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு உறவைக் கோருகிறது.
இந்தியா மற்றும் அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கூட்டாக பணியாற்றுகின்றன. இது வெறும் உதவி அல்ல, இரு நாடுகளும் சம பங்காளிகளாக இணைந்து செயல்படுவதற்கான அறிகுறி.
இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. கூட்டு ராணுவப் பயிற்சிகள், ஆயுத கொள்முதல் மற்றும் உளவு தகவல்கள் பரிமாற்றம் போன்றவை, இரு நாடுகளின் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துகின்றன.
இந்தியா, உலகளாவிய நிகழ்வுகளுக்கு வெறும் எதிர்வினை ஆற்றுவதோடு நிற்கவில்லை. மாறாக, உலக ஒழுங்கை வரையறுக்கும் ஆற்றலை கொண்ட ஒரு சக்தியாக வளர்ந்துள்ளது. இது, அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குகிறது. இந்த அத்தியாயம், மோதல்களால் நிரம்பியது அல்ல. மாறாக, புவியியல், தேசிய முன்னுரிமைகள் மற்றும் மாறுபட்ட கண்ணோட்டங்களின் காரணமாக எழும் வேறுபாடுகளால் நிறைந்துள்ளது. இதுவே ஒரு முதிர்ந்த கூட்டாண்மையின் அடையாளம்.
சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் இந்தியா எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இதனால், இந்தியாவின் வெளியுறவு கொள்கை, உலகளாவிய அதிகாரத்தை காட்டுவதைவிட, தனது சொந்த பிராந்தியத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.
அமெரிக்காவிற்கு சீனா ஒரு போட்டியாளர். ஆனால், இந்தியாவிற்கு அது ஒரு வர்த்தக கூட்டாளி. எனவே, இந்தியா, சீனாவுடனான உறவில் ஒரு சமநிலையை கடைபிடிக்கிறது.
அமெரிக்காவின் எரிசக்தி கொள்கை பெரும்பாலும் ராஜதந்திர நோக்கங்களை அடிப்படையாக கொண்டது. ஆனால், இந்தியாவின் கொள்கை தனது மக்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம்.
இந்தியா இன்று உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக உயர்ந்து நிற்கிறது. சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மற்றும் ராணுவ பலம் ஆகியவற்றின் மூலம் அது தனது சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும். இந்தியா தனது பாதையை தானே வடிவமைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநிறுத்துகிறது. அதேசமயம், தனது மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து பயணிக்கவும் தயாராக உள்ளது. இதுவே முதிர்ச்சி. இதுவே இந்தியாவின் புதிய எழுச்சி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
