தேசிய நெடுஞ்சாலைகளில் தனிநபர் வாகன ஓட்டிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, புதிய ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த பாஸுக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டு வருகின்றன, இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த புதிய ஃபாஸ்டேக் ஆண்டு பாஸின் விலை ரூ.3,000. இந்த பாஸைப் பயன்படுத்தி, வாகன ஓட்டிகள் ஒரு வருடத்திற்குள் 200 சுங்கச்சாவடிகளைக் கட்டணமின்றி கடக்கலாம். இது தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக் முறையிலேயே செயல்படும்.
இந்த பாஸ், செயல்பட தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள், இவற்றில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை ஒருமுறை கடப்பது ஒரு பயணமாக கணக்கிடப்படும். இருவழிப் பயணம் இரண்டு பயணங்களாக கருதப்படும்.
அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் ஓட்டுநர்களுக்கு இந்த திட்டம் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். தற்போது, 200 பயணங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 செலவாகிறது. ஆனால் புதிய பாஸ் மூலம் அது ரூ.3,000 ஆக குறையும் என்று கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒரு சுங்கச்சாவடியை கடப்பதற்கான சராசரி கட்டணம் ரூ.50 முதல் ரூ.100 வரை உள்ளது. இந்த பாஸ் மூலம் ஒரு பயணத்திற்கு சராசரியாக ரூ.15 மட்டுமே செலவாகும்.
இந்த ஆண்டு பாஸுக்கான பிரத்யேக இணைப்பு ராஜமார்க்யாத்ரா செயலி மற்றும் NHAI, MoRTH இணையதளங்களில் கிடைக்கும். இந்த பாஸ் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்குப் பொருந்தாது. வாகனமும், அதனுடன் இணைந்த ஃபாஸ்டேக்கும் தகுதியானதா என்பதைச் சரிபார்த்த பின்னரே ஆண்டு பாஸ் செயல்படுத்தப்படும். சரிபார்ப்புக்குப் பிறகு, ரூ.3,000 செலுத்தினால் பாஸ் செயல்பாட்டுக்கு வரும்.
இந்த புதிய நடைமுறை, நெடுஞ்சாலைப் பயணங்களை ஊக்குவிப்பதோடு, போக்குவரத்து மேலாண்மையையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
