இன்று நாம் ஒரு ஊரை விட்டு இன்னொரு இடம் செல்வதற்காக பேருந்து, ரயில் என எந்த போக்குவரத்து வசதியை பயன்படுத்தினாலும் அவற்றுள் மிகுந்த நெரிசல் மிக்க ஒரு சூழல் தான் இருந்து வருகிறது. இன்று பல வீட்டிலும் பைக், கார் என இருந்தாலும் பேருந்து, ரயிலில் கூட்டம் ஒரு நாள் கூட குறைவதே கிடையாது. ஊர் பக்கமே இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் சூழலில், சென்னை, மும்பை, ஹைதராபாத் என நகரப் பகுதிகள் வந்து விட்டால் அங்கே நிலைமை இன்னும் மோசம் தான்.
பல இடங்களில் பேருந்து, ரயிலை தாண்டி மெட்ரோ வந்த பின்னரும் கூட இன்னும் மக்கள் மத்தியில் கூட்ட நெரிசல் குறைந்தபாடில்லை. காலையில் சீக்கிரமாக தொடங்கும் இந்த போக்குவரத்து நெரிசல் இரவு பல மணி நேரங்கள் ஆனாலும் நகரப் பகுதிகளில் குறைவதே கிடையாது. இதனால் குறைந்த தூரம் ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்யும் நபர்கள் கூட மிகுந்த அலைச்சலுக்கு மத்தியில் தான் தாங்கள் விரும்பும் இடத்திற்கு சென்று சேர்கிறார்கள்.
அந்த வகையில் மும்பையில் ரயில் பயணம் என்பதே இடர் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படும் சூழலில், எத்தனை கூட்டம் இருந்தாலும் உட்கார்ந்தே செல்வதற்காக பயணி எடுத்த முயற்சி ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மும்பை மாநகரில் பணி முடிந்து பலரும் ரயிலில் திரும்பும் போது கூட்ட நெரிசல்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகும்.
ரயிலில் இருந்து ஒருவர் இறங்குவதற்கே இடமில்லாத அளவுக்கு வெளியே மக்கள் கூட்டம் அலைமோதியபடி நிற்கும். அத்தனை அவசரப்பட்டு ஏறினாலும் அவர்களுக்கு இடம் கிடைப்பது என்பது கடினமான ஒரு விஷயம் தான். இதற்கு மத்தியில் தான் மும்பை பகுதியில் வழக்கமாக ரயில் ஏறுவதாக தெரியும் ஒரு நபர், தான் நிற்கும் இடத்திலேயே உட்காரும் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி அனைவரையுமே அசர வைத்துள்ளார்.
இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில் மும்பை பகுதியில் ரயிலில் ஏறும் பயணி ஒருவர், தனது பையில் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான பிளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றை வைத்துள்ளார். ரயில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தான் நிற்கக்கூடிய இடத்தில் அதனை திறந்து வைத்து அதில் அமர்ந்தும் அவர் பயணம் செய்கிறார்.
மிகக் கூலாக அவர் செய்யும் இந்த நடவடிக்கை தொடர்பான வீடியோ தான் தற்போது பல நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருவதுடன் அவரது ஐடியாவும் பலரை வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது. இனி ரயிலில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் இந்த வழியை மேற்கொண்டால் போதும் என பலரும் வேடிக்கையாக தெரிவித்து வருகின்றனர்.