முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகமாக இருந்தாலும், அவர் அம்பானி குடும்ப உறுப்பினர்களில் இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரராக இல்லை. அவரை விட அதிகமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி என கூறப்படுகிறது.
திருபாய் அம்பானி நிறுவிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். Forbes தரவுகளின்படி, இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானி தான் என்றும் அவரது சொத்து மதிப்பு $95 பில்லியன் என்றும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அம்பானி குடும்பம் 50.39% வைத்துள்ள நிலையில், மீதமுள்ள 49.61% பங்குகள் பொது பங்குதாரர்களின் கீழ் உள்ளது. இதில் சர்வதேச நிறுவன முதலீட்டாளர்களும் அடங்குவர்.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபேன் அம்பானி மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரராக உள்ளார். அவர் 1,57,41,322 பங்குகளை வைத்திருக்கிறார்.
முகேஷ் மற்றும் நீதா அம்பானி மற்றும் அவருடைய குழந்தைகள் ஈஷா, ஆகாஷ், ஆனந்த் அம்பானி ஆகியோர் தலா 80,52,021 பங்குகளை வைத்துள்ளனர். இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிக ஷேர்களை கொண்டவர் கோகிலாபென் என தெரிய வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் கோகிலாபென் அம்பானி நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், குடும்பத்தினுள் அவர் முக்கியமான தாக்கம் செலுத்தும் நபராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு சரியான அளவில் வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ஊடகத் தகவல்படி, அவருக்கு ரூ.18,000 கோடி சொத்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் 49.61% பங்குகளை வைத்திருந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கியமான முடிவுகள் அம்பானி குடும்பம் தான் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.