போபால்: மத்திய பிரதேச மாநிலததில் முன்னாள் போலீஸ்காரர் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு பணம் உள்பட ரூ.8 கோடி சொத்துகளை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்தியபிரதேச மாநிலம் அரேரா காலனி பகுதியை சேர்ந்தவர் சவுரப் சர்மா. இவருடைய தந்தை ஆர்.கே.சர்மா. அரசு டாக்டரான அவர், பணியின்போது கடந்த 2015-ம் ஆண்டில் இறந்துவிட்டார். இதனால் கருணை அடிப்படையில் சவுரப் சர்மாவுக்கு போக்குவரத்து துறையில் போலீஸ்காரராக பணி வழங்கப்பட்டது. அவர் கடந்த 2023-ம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
சவுரப் சர்மா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இதுதொடர்பாக லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக அரேரா காலனியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் 2 நாட்கள் லோக் அயுக்தா சிறப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை பற்றி லோக் அயுக்தா ஐ.ஜி. ஜெய்தீப் பிரசாத் கூறுகையில், முன்னாள் போலீஸ்காரரான சவுரப் சர்மா, முறைகேடாக சம்பாதித்த பணத்தை தனது தாய், மனைவி, மைத்துனர் மற்றும் நெருங்கிய நண்பர்களான சேத்தன் சிங் கவுட், சரத் ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயரில் பள்ளி மற்றும் ஓட்டல் உள்பட பெரும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
அரேரா காலனி இ-7 செக்டரில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில், வெளிநாட்டு பணம் உள்பட ரூ.1.15 கோடி ரொக்கம், ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.2.21 கோடி மதிப்புள்ள வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே இடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.72 கோடி ரொக்கம், ரூ.2.10 கோடி மதிப்புள்ள 234 கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 கோடி மதிப்புள்ள இதர சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7.98 கோடியாகும்.. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக சவுரப் சர்மா, அவருடைய மனைவி, தாய் மற்றும் நண்பர்கள் சேத்தன் சிங் கவுட் மற்றும் சரத் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. போபால் புறநகரில் சேத்தன் சிங் கவுட்டுக்கு சொந்தமான காரில் இருந்து ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கம், ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வங்கி ஆவணங்களை வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகவும் லோக் அயுக்தா போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.