உலக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக இருக்கும் இஸ்ரேல்-ஈரான் மோதலின் பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வியூகங்கள் குறித்து சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறும் கருத்துக்களை பார்ப்போம்.
உலக அரசியல் என்பது வெறும் ராணுவ பலத்தை சார்ந்தது மட்டுமல்ல, அது காய் நகர்த்தப்படும் ஒரு சதுரங்க வேட்டை என்பதை தற்போதைய இஸ்ரேல்-ஈரான் பதற்றம் உணர்த்துகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், ஈரான் மீதான ராணுவ தாக்குதலாக தெரிந்தாலும், அதன் உண்மையான நோக்கம் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதாகும். இரண்டாம் உலக போருக்கு பிறகு வல்லரசுகள் ஒரு மேஜையில் அமர்ந்து உலகை வரிசைப்படுத்தியது போல, இப்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியாவும் அந்த பேச்சுவார்த்தை மேஜையில் அமர்வதற்கான களம் தயாராகிவிட்டது. இந்த புதிய அதிகார பகிர்வில் தங்களுக்குரிய பேரம் பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்வதற்காகவே ட்ரம்ப் இத்தகைய அதிரடி நகர்வுகளை மேற்கொள்கிறார்.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் எண்ணெய் அரசியலில் ட்ரம்ப்பின் நோக்கம் தெளிவானது. ஈரானின் எண்ணெய் வளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை தன்வசப்படுத்துவதன் மூலம், உலக எரிசக்தி சந்தையில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட அவர் முயல்கிறார். அதே சமயம், சீனாவால் உருவாக்கப்பட்ட முதலீடுகளை கொண்டே சீனாவை பிளாக்மெயில் செய்யும் வித்தையை ட்ரம்ப் கையில் எடுத்துள்ளார். போரை ஒரு ராஜதந்திர கருவியாக பயன்படுத்தும் ட்ரம்ப், அதன் மூலம் ரஷ்யாவுடனான உறவை சீரமைக்கவும், உக்ரைன் போரை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிடுகிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பொறுத்தவரை, அவர் இந்த உலக அரசியல் மாற்றங்களை மிக நுணுக்கமாக கவனித்து வருகிறார். இன்றைய இந்தியா 70 ஆண்டுகளுக்கு முந்தைய பலவீனமான நாடு அல்ல. உலக அளவில் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராகவும், ஒரு வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும் இந்தியா இருப்பதால், எந்த ஒரு உலக ஒழுங்கும் இந்தியாவின் அனுமதியின்றி செயல்பட முடியாது. அமெரிக்கா என்னதான் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தாலும், மோடி தலைமையிலான இந்தியா தனது ‘தேசிய நலனை’ மட்டுமே முன்னிறுத்தி செயல்படுகிறது.
ரஷ்யாவின் எண்ணெய் கிணறுகளில் இந்தியாவின் ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பெரும் முதலீடுகளை செய்துள்ளன. எனவே, ரஷ்யாவுடனான வர்த்தகத்தை துண்டிப்பது என்பது இந்தியாவின் முதலீடுகளை சிதைப்பதற்கு சமம் என்பதை மோடி உணர்ந்துள்ளார். அதே சமயம், அமெரிக்காவின் வியூகங்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில், தனது வெளியுறவு கொள்கையை இந்தியா மிக நேர்த்தியாக கையாண்டு வருகிறது. ட்ரம்ப் ரஷ்யா மற்றும் சீனாவுடன் பேரம் பேசும் போது, இந்தியாவின் தேவைகளையும் அந்த பேச்சுவார்த்தையில் ஒரு அங்கமாக மாற்றுவதில் மோடி உறுதியாக இருக்கிறார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சுயாட்சி’ என்ற கொள்கையை கடைபிடிக்கிறது. அதாவது, வல்லரசுகளின் போட்டியில் யாருடைய பக்கமும் சாயாமல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எது தேவையோ அதை செய்வதே இந்தியாவின் நோக்கம். ட்ரம்ப்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கைக்கு இணையாக, மோடியின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் தேசிய நலன் சார்ந்த கொள்கைகள் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பையும் பேரம் பேசும் சக்தியையும் உயர்த்தியுள்ளன. அமெரிக்க அதிபரின் ஒவ்வொரு மூவிற்கும் பின்னால் இருக்கும் அரசியல் இலக்கை இந்தியா நன்கு அறிந்து வைத்துள்ளது.
இறுதியாக, உலக அரசியல் என்பது பகைவர்களை நண்பர்களாகவும், நண்பர்களை கூட்டாளிகளாகவும் மாற்றும் ஒரு கலை. ட்ரம்ப்பின் அதிரடி மாற்றங்களும், அதற்கு இணையாக மோடி காட்டும் நிதானமான ஆளுமையும் மத்திய கிழக்கின் வரைபடத்தை மட்டுமல்ல, உலக அதிகார மையத்தையே மாற்றி அமைக்கும். போர் என்பது கசப்பான ஒன்றாக தெரிந்தாலும், அது ஒரு புதிய நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பது ராஜதந்திரிகளின் கணிப்பு. அந்த சமநிலையை உருவாக்குவதில் இந்திய பிரதமரும் அமெரிக்க அதிபரும் தங்களுக்குள் ஒரு மறைமுக புரிதலோடு செயல்பட்டு வருகிறார்கள் என்பதே தற்போதைய நிதர்சனம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
