ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவுக்கு சமீபத்தில் வருகை தந்தார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டன. புதின் வந்திறங்கியபோது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவரை பாலம் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். ஒரு நாட்டின் தலைவர், மற்றொரு நாட்டின் தலைவர் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்பது என்பது அதிகபட்ச மரியாதை மற்றும் கௌரவத்தின் வெளிப்பாடாகும். இது அமெரிக்கா, சீனா மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு, இந்தியா – ரஷ்யா உறவு எந்த அளவிற்கு உத்திசார்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்ற தெளிவான செய்தியை பகிர்கிறது.
புதின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது, அவர் வழக்கமான புல்லட் ப்ரூஃப் பிளாக் மெர்சிடிஸ் அல்லது வேறு ஆடம்பர கார் இல்லாமல், ஒரு வெள்ளை டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் அழைத்து செல்லப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பல விவாதங்களை எழுப்பியது. பொதுவாக, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கறுப்பு ஆடம்பர கார்களையே பயன்படுத்துவார்கள். இதில் வெள்ளை நிற குறியீடு என்பது நடுநிலைமை, எளிமை மற்றும் அமைதி ஆகியவற்றை குறிக்கிறது.
பாதுகாப்பற்றது என்று தோன்றும் ஒரு வெள்ளை காரை முக்கிய தலைவர் பயன்படுத்துவது, டெல்லியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பிறகும், நாங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறோம், எல்லாம் சரியாகிவிட்டது என்ற செய்தியை உலகிற்கு உணர்த்துகிறது. இது ஒரு தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
இந்தச் வெள்ளை டொயோட்டா கார் குறித்த விவாதத்தில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால், அந்த கார் மேக் இன் இந்தியா முயற்சியில் உருவானது என்பதாகும். இந்த புல்லட் ப்ரூஃப் டொயோட்டா கார்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இது ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட நேரடியான செய்தி. “நீங்கள் எங்கள் குடும்பம். உலகின் மிக முக்கியமான உறவுகளில் ஒன்றை, நாங்கள் ‘மேக் இன் இந்தியா’ காரில் அழைத்துச் செல்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த தயாரிப்பு மற்றும் பாதுகாக்கும் திறன்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.”
இந்த சந்திப்பின்போது, இருதரப்பிலும் 12 அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டன. இதில் பிரதானமாகப் பேசப்பட்ட விஷயங்கள்:
பிரம்மோஸ் ஏவுகணை மேம்படுத்தல், ஆர்க்டிக் மற்றும் வடக்கு-தெற்கு கடல் வழித்தடங்கள் பயன்பாடு, மற்றும் ரூபாய் – ரூபிள் வர்த்தகத்துக்கான டாலர் அல்லாத புதிய வழிமுறைகள் அமைத்தல். மேலும் க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் பரிமாற்றம், விண்வெளிக் கூட்டுறவு மற்றும் மனித விண்வெளி பயண திட்டங்களில் ஒத்துழைப்பு. பிராந்தியப் பாதுகாப்பு, குறிப்பாக ஐஎஸ்கேபி (ISK-P) மற்றும் வங்காளதேசத்தில் ரஷ்யாவின் நலன்கள் குறித்து பேசப்பட்டது.
இந்த சந்திப்பை குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. “ரஷ்யா உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று மேற்கத்திய நாடுகள் விமர்சித்தபோதும், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, புதினை வரவேற்றதன் மூலம் “நாங்கள் யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்” என்ற தெளிவான செய்தியை மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இந்தியா தனது வெளியுறவு கொள்கைகளைத் தானே தீர்மானிக்கிறது என்பதையும், உலக அரங்கில் அதன் இறையாண்மையையும் இது உறுதிப்படுத்துகிறது.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நீண்ட கால உத்திசார்ந்த சிந்தனையின் ஒரு பகுதியாகும். ரஷ்யாவிற்கு இந்தியாவின் உற்பத்தி திறன், சந்தை மற்றும் சர்வதேச அங்கீகாரம் தேவைப்படுகிறது. அதே சமயம், இந்தியாவிற்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு ஆகியவை அவசியம். இந்த சந்திப்பு தொடர்வது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உறவை உறுதிப்படுத்துகிறது. அடுத்த முறை பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டிற்காக புதினை இந்தியாவுக்கு அழைக்க வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
