அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலேசியாவில் நடைபெற உள்ள ஆசியான் (ASEAN) உச்சி மாநாட்டின்போது சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு, சமீபகாலமாக தளர்ந்துள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த மாநாடு 2026ஆம் ஆண்டு கோலாலம்பூரில், அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ளதால் மோடி – டிரம்ப் சந்திப்பு நடக்க இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதித்தது, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து பகிரங்கமாக விமர்சித்தது போன்ற காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், மோடி, புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்து, “இந்தியா மற்றும் ரஷ்யாவை நாம் இருண்ட சீனாவிடம் இழந்தது போல தெரிகிறது” என்று பதிவிட்டிருந்தார். இது இரு நாடுகளின் வெளியுறவு கொள்கை வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைக்கு பிறகு, டிரம்ப் தனது கருத்தை மாற்றிக்கொண்டு, “நான் எப்போதும் மோடியுடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு சிறப்பான உறவு உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை” என்று கூறினார். இந்த நிலைப்பாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை சரிசெய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில், 2026ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும் 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில், அதிபர் டிரம்ப் பங்கேற்பார் என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் மோடியும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உச்சி மாநாடு, மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர், தென் சீனக் கடல் தகராறுகள் மற்றும் அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தக கொள்கைகள் போன்ற பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிக்க ஒரு தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் நேரடியாக சந்தித்துப் பேசுவதற்கான ஒரே வாய்ப்பு இந்த மாநாடுதான் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு மட்டும் நடக்கவில்லை என்றால் இந்திய, அமெரிக்க உடைந்த உறவை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சந்திப்பு நடந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணித்து, புதிய அத்தியாயத்தை தொடங்கும் என அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
