அமெரிக்கா தனது பொருளாதார நலன்களை காக்க வர்த்தக தடைகளையும், அதிக வரிகளையும் விதிப்பது, ஒரு காலத்தில் பலனளித்திருக்கலாம். ஆனால், தற்போது மாறிவரும் உலகளாவிய பொருளாதார சூழலில், இதுபோன்ற வர்த்தக தடைகள் அமெரிக்காவுக்கு எந்த பலனையும் அளிக்காது என்றும், 5 பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள், இந்த தடைகளை எளிதில் கடந்துசெல்லும் திறன் பெற்றுள்ளன.
எந்தவொரு நாடும் அதிக வரிகளுடன் ஒரு நாட்டில் வர்த்தகம் செய்ய விரும்பாது. அமெரிக்கா வரிகளை விதிக்கும்போது, அந்த நாடுகள் மாற்று சந்தைகளை நோக்கி செல்லும். உதாரணத்திற்கு, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் தங்களுக்குள் வலுவான வர்த்தக கூட்டணிகளை உருவாக்கி வருகின்றன. இதனால், அமெரிக்கா தனது சந்தை ஆதிக்கத்தை இழக்க நேரிடும்.
அமெரிக்காவுக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. வர்த்தக தடைகள் மற்றும் அதிக வரிகள் விதிக்கப்படும்போது, இறக்குமதி பொருட்களின் விலை உயரும். இது நேரடியாக அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். உள்நாட்டில் விலைவாசி உயர்ந்து, அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும்.
இந்தியா போன்ற நாடுகள், தங்கள் உற்பத்தியை உள்நாட்டிலேயே விற்பனை செய்யும் திறன் பெற்றுள்ளன. ஆனால், அமெரிக்காவுக்கு அத்தகைய வாய்ப்பு குறைவு. அமெரிக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் முடியாது. எனவே, உலக நாடுகளை சார்ந்துதான் அமெரிக்கா தனது பொருளாதாரத்தை தக்கவைத்து கொள்ள முடியும். வர்த்தக தடைகள், இந்த சார்புநிலையைக் குறைப்பதற்கு பதிலாக, அமெரிக்காவை மேலும் தனிமைப்படுத்தும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரங்கள், இந்த சவாலான சூழலை எதிர்கொள்ள மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. மோடி தலைமையிலான இந்தியா, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணியாமல், தனது நாட்டின் நலன்களை முன்னிறுத்தி செயல்படுகிறது. அதே சமயம், உலக நாடுகளுடனும் வலுவான வர்த்தக உறவுகளை பேணி வருகிறது.
இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்ற தெளிவான செய்தியை மோடி உலகிற்கு வழங்கியுள்ளார். தேசிய கௌரவம் என்பது ஒரு ஆடம்பரம் அல்ல, அது ஒரு நாட்டின் மதிப்புமிக்க சொத்து என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
இந்தியாவின் ‘சுயசார்பு இந்தியா’ திட்டம், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதையும், இறக்குமதி சார்பைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இது இந்தியா வர்த்தக போர்களின் தாக்கத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.
வளர்ந்து வரும் நாடுகளை பகையாக கருதுவதற்கு பதிலாக, அமெரிக்கா அவர்களை ஒரு கூட்டாளியாக அணுக வேண்டும். இல்லையெனில், வல்லரசாக இருந்தாலும், உலக நாடுகளின் ஆதரவை இழந்து, பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம் என உலக பொருளாதார வல்லுனர்கள் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையெல்லாம் ஆலோசித்து டிரம்ப் மனம் மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
