டெல்லி: வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு மத்திய அரசு அளிக்கும் வரி விலக்கு உச்சவரம்பை ரூ.25,000 ஆக மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி 3.0 ஆட்சின் முதல் வருடத்திற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக ஜூலை 22ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இந்த பட்ஜெட் அறிக்கை குறித்து பல எதிர்பார்ப்புகள் இருக்கிறது. வருமான வரி விலக்கு முதல் பெரும்பாலான மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதில் ஒன்று தான் இது,, வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு மத்திய அரசு அளிக்கும் வரி விலக்கு உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவதற்கான பரிந்துரை மீது மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.
இது குறித்து கடந்த வாரம் நிதித்துறை அதிகாரிகளுடனான மத்திய நிதியமைச்சக கூட்டத்தில் வங்கிகள் பரிந்துரை செய்தனவாம்.
இது நடைமுறைக்கு வந்தால் வங்கிகளில் கூடுதல் டெபாசிட் செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்காது என்றும் வங்கிகளுக்கு போதுமான நிதி ஆதாரம் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்தன. இந்த கோரிக்கை மத்திய அரசு பரிசீலித்துள்ளதாம்.
எனவே வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு அளிக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.25,000 பரிந்துரையின் இறுதி முடிவை பட்ஜெட் அறிவிப்பில் வரலாம் என்கிறார்கள். தற்போது பழைய வரிமுறைப்படி, வருமான வரி சட்டத்தின் பிரிவு 80TTA படி, வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வரையிலான வட்டி வருமானம் வரி விலக்கு கிடைக்கிறது.இதுவே 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, இந்த வரம்பு ரூ.50,000 ஆகும். மேலும் பிரிவு 80 TTB கீழ் நிலையான டெபாசிட்டுகளில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானம் இதில் அடங்கும்.