குருகிராமில் தனது வாகனத்திற்காக காத்திருந்தபோது ஒரு இளைஞர் தன்னை சுற்றி சுற்றி வந்து பின்னர் சுய இன்பம் செய்ய தொடங்கியதாகவும், இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விளம்பர மாடலும், டிஜிட்டல் ஊடக பிரபலமான சோனி சிங், கடந்த வெள்ளிக்கிழமை, ஜெய்ப்பூரிலிருந்து திரும்பிய நிலையில், காலை 11 மணியளவில் ஒரு வாடகை வாகனத்திற்காக காத்திருந்ததாகவும், அப்போது திடீரென ஒரு நபர் தன்னை நெருங்குவதை கண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த நபர் என்னை சுற்றி சுற்றி வந்தான், என்னையே தொடர்ந்து வெறித்து பார்த்தான். முதலில் நான் அவனை பார்ப்பதையே புறக்கணித்தேன், ஆனால் பிறகு அவன் திடீரென பேண்ட் ஜிப்பை திறந்து எனக்கு முன்னால் சுய இன்பம் செய்ய தொடங்கினான்,” என்று சோனி சிங் சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.
“அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். இதனால் நான் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். இது எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
சோனி சிங் தனது வாடகை வாகன ஓட்டுநரை அழைக்க முயன்றார், ஆனால் அது பலனளிக்கவில்லை. அந்த நபரைத் தவிர்ப்பதற்காக அவர் வேறொரு வாகனத்தை முன்பதிவு செய்தார். சோனி சிங் இறுதியாக வேறொரு வாகனத்தில் ஏறி வீட்டிற்கு சென்று, அந்த சம்பவத்தையும், சுய இன்பம் செய்த நபரின் படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ‘X’ கணக்குகளில் பகிர்ந்துள்ளார்.
“நான் அருவருப்பாக, பாதுகாப்பற்றதாக, மற்றும் உதவியற்றதாக உணர்ந்தேன். பகல் நேரத்தில்கூட ஏன் பெண்களுக்குப் பொது இடங்களில் பாதுகாப்பு இல்லை? இத்தகைய காமக் கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை. பொது இடங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்” என்று அவர் படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
தான் காவல்துறையையும் மகளிர் உதவி மையத்தையும் அழைத்தும், யாரிடமிருந்தும் பதில் வரவில்லை என்று சோனி சிங் கூறுகிறார். பிறகு, ஒரு வழியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு வருமாறு அவரிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 4-ஆம் தேதி, சோனி சிங் அந்த சம்பவம் குறித்த விவரங்களை விளக்கி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த நபரை அடையாளம் கண்டு, நீதியின் முன் நிறுத்த உதவுமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், எந்தவித பதிலும் அளிக்காத வாடகை வாகன ஓட்டுநர் குறித்தும், இதனால் தான் பதற்றமாகவும் பாதுகாப்பற்றதாகவும் உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி, வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு, குருகிராம் காவல்துறையினர் இதற்கு பதிலளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
அந்தக் குற்றவாளியை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், அவரை கண்டறிய சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் சந்தீப் தெரிவித்தார்.
சோனி சிங், அழகு, சருமப் பராமரிப்பு மற்றும் ஃபேஷன் தொடர்பான டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கும் படைப்பாளி. அவருக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 40,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
