இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமாவதற்கு முன்பு, STD, PCO தொழில்கள் மிகப்பெரிய வருமானம் கொடுக்கும் தொழிலாக இருந்தது. லட்சக்கணக்கானோர் அந்த வருமானத்தை நம்பியிருந்தனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் இன்று ஒருசில எஸ்டிடி பூத்து மட்டுமே உள்ளது. இதற்கு ஒரே காரணம், மொபைல் போனின் வளர்ச்சி தான்.
ஒவ்வொருவரது கையிலும் ஒரு மொபைல் போன் இருக்கும் நிலையில், STD, PCO தேவையில்லாமல் போய்விட்டது. அது போலத்தான், AI தொழில்நுட்பம் காரணமாக சில தொழில்கள் மறைந்து போகும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக வேலைவாய்ப்பில் குறைவு ஏற்படும் என்ற நான் எண்ணவில்லை என பேடிஎம் நிறுவனர் சேகர் ஷர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசினார்.
STD, PCO தொழிலை பார்த்தவர்கள் தற்போது வேறு தொழிலுக்கு மாறியுள்ளார்கள். அதைப் போலவே, AI தொழில்நுட்பத்தால் சில வேலைகள் பறிபோகும் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில், கூடுதல் வேலை வாய்ப்புகளும் உருவாகும். AI தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்பதால், மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று அவர் கூறினார்..
மேலும் AI தொழில்நுட்பம் என்பது அச்சப்பட வேண்டிய ஒன்றல்ல என்று தெரிவித்துள்ள சேகர் ஷர்மா, 1990களில் இணையம் அறிமுகமானபோது இருந்த நிலைமை போலத்தான் தற்போது AI அறிமுகமாகியுள்ளது. இது நீண்ட காலத்திற்கு செல்லும் தொழில்நுட்பம் என்பதால், அதன் வளர்ச்சி மற்றும் பாதிப்புகளை காலப்போக்கில் தான் காண முடியும்.
எனவே, வேலை வாய்ப்பு குறைந்துவிடும் எனக் கவலைப்பட தேவையில்லை. எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றனவோ, அதே அளவுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று அவர் கூறினார்.