இந்தியாவில் மாதவிடாய் என்ற சொல் நீண்ட காலமாகவே புறக்கணிக்கப்படும் சொல்லாக பார்க்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகளில், இந்த விஷயங்கள் சுமூகமாக பேசப்படுவதில்லை. ஆனால் இப்போது, இந்த போக்கை வண்ணமயமான காமிக் புத்தகங்கள் உடைத்துவிட்டன, காரணம் ‘Menstrupedia’.
குஜராத்தைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட்-அப், 2013 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியது. நோக்கம் மிகவும் எளிமையானது. “இந்தியாவில் மாதவிடாய் பற்றி பேசும் முறையை மாற்றுவது”. அதை காமிக் புத்தகங்களில் பிங்கி, குலு, ஆதி மற்றும் அங்கூ போன்ற கதாபாத்திரங்கள் மூலம் சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் மாதவிடாய், வயது மாற்றம், குட் மற்றும் பேட் டச் போன்ற விஷயங்களை பயமின்றி, ஆவலோடும் நம்பிக்கையோடும் கற்றுத் தரப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் மாதவிடாய் பற்றி பேசுவது கூட தடைபட்ட விஷயமாக இருப்பதால், Menstrupedia-வின் தொடக்க பயணம் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. நிறைய ஆண் முதலீட்டாளர்களும் வழிகாட்டிகளும் இந்த யோசனையை பழங்கால நம்பிக்கை, இதை பெரிதாக மாற்ற முடியாது என்று விமர்சித்தனர். மிகவும் சோகமாக, இந்த விமர்சனங்கள் வெளியிலிருந்து அல்ல, நிறுவனத்தில் உள்ளே இருந்தும் வந்தன.
இருப்பினும் இந்த நிறுவனம் தான் வைத்திருந்த நம்பிக்கையில் தளரவில்லை. இன்று Menstrupedia, வண்ணமயமான காமிக் புத்தகங்கள், வேலைப்பாடுகள் மற்றும் அனிமேஷன் வீடியோக்கள் மூலம் இந்தியா முழுவதும் பரவி விட்டது.
இன்று இந்தியாவின் 25,500க்கும் மேற்பட்ட பள்ளிகள், நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், அரசு அமைப்புகள், Menstrupedia உருவாக்கிய பாடக்கருவிகளை பயன்படுத்துகின்றன. இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளில் இதன் பயன்பாடு பரவியுள்ளது.
Menstrupedia என்ற இந்த ஸ்டார்ட்-அப்பை உருவாக்கியவர் ஆதிதி குப்தா மற்றும் துஹின் பால். இருவரும் அகமதாபாத்தின் தேசிய வடிவமைப்பு நிறுவன பட்டதாரிகள். ஆதிதி, மாதவிடாய் கல்வி வழங்கும் நிபுணராக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
துஹின் பால், கலைஞர், கதாசிரியர், காமிக் புத்தகங்களில் வரும் அழகான ஓவியங்கள் அனைத்தும் அவருடைய கைவண்ணம். இந்த நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து அவர் அதில் பங்கெடுத்து வருகிறார்.
பஞ்சாப், ஜார்கண்ட், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடன் கூட்டணி அமைத்த Menstrupedia, தற்போது ITC, JSW, Biocon, Reliance Foundation போன்ற நிறுவனங்களின் CSR திட்டங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
அனைத்து இந்திய மொழிகளில் மாதவிடாய் கல்வியை வழங்கும் மாதிரி வகுப்புகளை நடத்தி வருவது சிறப்பம்சம். இது 25 நாடுகளில் இருந்து பயில்வோரை கவர்ந்துள்ளது.
இன்று, Menstrupedia-வின் காமிக் புத்தகங்கள் நேபாளம், உருகுவே, ஹங்கேரி உள்ளிட்ட 9 நாடுகளில் விற்பனை ஆகின்றன. மாதவிடாய் என்பது வெட்கப்படும் விஷயமல்ல. அது சக்தி வாய்ந்த ஒன்று. அதைப்பற்றி நாமும் ஓப்பனாக, உரிய முறையில் பேச வேண்டிய காலம் இது என்ற விழிப்புணர்வை Menstrupedia அனைவருக்கும் வழங்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
