மேகாலயா மாநிலத்தில் உள்ள நரொங்க்ரே என்ற கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அந்த கிராமத்தில் இன்னும் மின்சார வசதி இல்லை. இதை அறிந்த Global Himalayan Expedition (GHE) என்ற நிறுவனம், அந்த கிராமத்திற்கு சோலார் அடுப்புகளை வழங்குவதற்காக முன்வந்தது.
இந்தியாவில் முதல் முறையாக சோலார் சக்தியில் இயங்கும் மின்சார பிரஷர் குக்கர் (Pressure Cooker) அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, முதல்வர் சங்மா அந்த கிராமத்திற்குச் சென்று, இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் சூரிய சக்தியால் இயங்கும் மின்சார அடுப்புகளை வழங்கி, இனிமேல் யாரும் மர அடுப்புகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இதைக் கண்ட கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனால், பெண்கள் தினமும் 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று அடுப்பு எரிக்க மரங்களை சேகரிக்க வேண்டிய நிலை இனி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், காடுகளை அழிக்கும் செயலும் நிறுத்தப்படும்.
அது மட்டுமன்றி, மர அடுப்புகளால் ஏற்படும் தீ விபத்துகளும், காற்று மாசுபாடு குறையும். இதற்குப் பதிலாக, சிலர் மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தியிருந்தாலும், தற்போது அந்த கிராமத்தினர் முழுவதும் சோலார் சக்தியால் இயங்கும் மின்சார அடுப்புகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக GHE நிறுவனம் 20,000 பயனாளிகளுக்கு சூரிய ஒளியால் இயக்கப்படும் மின்சார அடுப்புகளை வழங்கி வருகிறது.
அது மட்டுமின்றி, சோலார் சக்தியின் மூலம் பல வீடுகளுக்கும் மின்சார வசதியையும் செய்து கொடுத்துள்ளது. குறிப்பாக, பல பள்ளிகளுக்கு இலவசமாக சோலார் மின்சாரத்தையும் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் சங்மா கூறியதாவது: “இந்த திட்டம் ஒரு முக்கியமான சாதனை. இதன் மூலம், மேகாலயா மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சோலார் வசதியை செய்து கொடுக்க அரசு ஏற்பாடு செய்யும்.”
இந்தியா முழுவதும் சோலார் அடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இந்தியாவில் சோலார் புரட்சி ஏற்படும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.