பான்டோமாத் குழுமத்தின் ஒரு அங்கமான ‘தி வெல்த் கம்பெனி’ (The Wealth Company), தனது மியூச்சுவல் ஃபண்ட் வணிகத்தை தொடங்க, செபியிடம் இருந்து இறுதிக்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒரு பெண் நிறுவிய முதல் ஃபண்ட் ஹவுஸ் என்ற வரலாற்று சாதனையை இந்நிறுவனம் படைத்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை நிறுவிய முதல் இந்தியப் பெண் மது லுனாவத்:
இந்த புதிய சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கு (Asset Management Company – AMC) மது லுனாவத் தலைமை தாங்குகிறார். இவர் பான்டோமாத் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநராகவும் உள்ளார். மது லுனாவத், சுயமாக ஒரு ஃபண்ட் ஹவுஸை நிறுவி, செபியின் ஒப்புதலை பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது சுமார் 46 ஃபண்ட் ஹவுஸ்கள் இருந்தாலும், எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே ராதிகா குப்தா என்ற ஒரு பெண்ணால் வழிநடத்தப்படுகிறது.
இதற்கு முன்பு, லுனாவத் இன்ஃபோசிஸ், ASREC மற்றும் எடெல்வைஸ் குழுமம் போன்ற நிறுவனங்களில் தலைமை பதவிகளை வகித்துள்ளார். எடெல்வைஸ் ARC-யின் CFO ஆகவும் பணியாற்றியுள்ளார். “இது எனக்கு மட்டுமல்ல, நிதித்துறையை உருவாக்க, வழிநடத்த மற்றும் மறுவடிவமைக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது ஒரு முக்கியமான தருணம்” என்று லுனாவத் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
“இந்திய முதலீட்டாளர்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப, புத்திசாலித்தனமான, நீண்டகால மற்றும் ஆழமாக இணைந்த ஒன்றை கட்டியெழுப்ப நாங்கள் இங்கு வந்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
தி வெல்த் கம்பெனி மியூச்சுவல் ஃபண்ட்: இந்தியாவின் இளைய AMC:
செபியிடமிருந்து ஜூலை 18 அன்று பதிவு சான்றிதழை பெற்றதன் மூலம், ‘தி வெல்த் கம்பெனி மியூச்சுவல் ஃபண்ட்’ அதிகாரப்பூர்வமாக மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நுழைந்துள்ளது.
சரியான முதலீட்டு ஆலோசனைகளை அன்றாட சில்லறை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும் இவர்களின் நோக்கம். படிப்படியாக சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்ற முதலீட்டு தத்துவம், உண்மையான முதலீட்டாளர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, எளிமையையும் ஒழுக்கத்தையும் பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற நகரங்கள் மீது கவனம்:
‘தி வெல்த் கம்பெனி மியூச்சுவல் ஃபண்ட்’ ஆனது, Tier-3 மற்றும் சிறிய நகரங்களில் கணிசமான கவனம் செலுத்தும். இந்த நகரங்களில் வருமான நிலைகள் அதிகரித்து வருகின்றன, மேலும் பயன்படுத்தப்படாத முதலீட்டு திறனும் உள்ளது. இந்த முயற்சி இந்தியாவின் வளர்ச்சி பயணத்திற்கு உதவும்.
‘தி வெல்த் கம்பெனி’யின் மியூச்சுவல் ஃபண்ட் துறை குறுகிய காலத்தில் ஈக்விட்டி மற்றும் கட்டமைக்கப்பட்ட உத்திகள் முழுவதும் ஒரு வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கியது. இது முன்னணி முதலீட்டாளர்களை ஈர்த்தது. இந்த அடித்தளம் அதன் மியூச்சுவல் ஃபண்ட் சலுகைகளுக்கு தொடக்கத்திலிருந்தே புதுமையையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வர உதவும்.
“மியூச்சுவல் ஃபண்டுகளுக்குள் எங்கள் நுழைவு, எங்கள் மாற்று திட்டங்களிலிருந்து அதே ஒழுக்கமான, தரவு சார்ந்த தத்துவத்தை ஒரு பரந்த சில்லறை தளத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற உறுதிப்பாட்டால் உந்தப்படுகிறது. உயர்தரமான, முடிவு சார்ந்த தயாரிப்புகளை வழங்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம், இது இந்திய முதலீட்டாளர்களுக்கு உண்மையாகவே அதிகாரமளிக்கும்.” என மது லுனாவத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
