ஒரு நபருக்கு வாழ்க்கை முழுவதும் பிரச்சனையாக இருக்க, பசி என்ற ஒரே வார்த்தையால் குடும்பத்தினர் கூட சேர்க்காமல் இருந்து வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் கௌரிகர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கே தான் 55 வயதான சுக்ரு அகிர்வார் வசித்து வருகிறார். இவர் மிகவும் பின்தங்கிய ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். சிறுவயதில் இருந்தே இவரது வாழ்க்கையில் அத்தனையுமே கஷ்டங்கள் மட்டும்தான் நிரம்பியுள்ளது.
சிறுவயதில் வறுமை காரணமாக தனது பள்ளி படிப்பை படிக்க முடியாமல் பாதியிலே நிறுத்தி இருந்தார் சுக்ரு. அது மட்டுமில்லாமல் இவருக்கு அரசு பணி கிடைத்த போதிலும் கூட குடும்பத்தை விட்டு விலகி நிற்க முடியாது என்பதால் அதற்கும் அவரால் செல்ல முடியவில்லை. தனது வாழ்நாளில் இறுதி நாள் வரை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டிருந்தது சுக்ருவின் வாழ்க்கையை இன்னும் கடினமாக மாற்றி இருந்தது.
அரசு வேலையை விட்டதன் காரணமாக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கூலித் தொழிலாளியாக தான் வாழ்ந்து வருகிறார் சுக்ரு. அப்படி இருக்கும் அவருக்கு மிக வினோதமான ஒரு பிரச்சனை உள்ளது. இவருக்கு பசி வந்து விட்டால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடனடியாக வயிறு நிறையாது. உதாரணத்திற்கு அவருக்கு பசி என வந்துவிட்டால் ஒரு கிலோ மாவை ஒரே நேரத்தில் தின்று விடுவாராம். ஈரமான மாவில் வெல்லத்தை சேர்த்து உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ள சுக்ரு, 55 வயதிலும் 14 ரொட்டிகள் வரை சாப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர ஒரே நேரத்தில் ஒரு கிலோ ஜிலேபி, உளுந்து மாவு லட்டு என எது கிடைத்தாலும் அதிகமாக சாப்பிடும் நிலையில், குடும்பத்திலும் இதன் காரணமாக பிரச்சனை வைத்துள்ளது. இவர் ஒரு மாதத்திற்கு உண்பதற்காகவே அதிக வருமானம் வேண்டும் என்பதால் இவரது பிள்ளைகள் அனைவருமே தனியாக வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் சுக்ருவின் மனைவி கூட பல நேரத்தில் கணவர் மீது அக்கறை காட்டவும் மறுத்து வருகிறார்.
தற்போதும் கூலி வேலை செய்து வரும் சுக்ரு, சம்பளத்திற்கு பதிலாக அரிசி மற்றும் மாவு ஆகியவற்றை கேட்டு வாங்கி கொள்கிறார். பணம் வாங்கிக் கொண்டாலும் அதற்காக மாவு மற்றும் அரிசி வாங்கியே தீர்ந்துவிடும் என்பதால் உணவுப் பொருட்களையே அவர் வேலை செய்யும் இடத்தில் கேட்டு வாங்கி வருகிறார். ஒரு மாதத்திற்கு அரசாங்கத்திடமிருந்து 5 கிலோவிற்கு தானியங்கள் வாங்கியும் அது சுக்ரு என்ற ஒரு நபரின் பசியை போக்க போதவில்லை எனக் கூறப்படுகிறது.
கொஞ்ச நாளிலேயே அவை தீர்ந்து விடும் என்பதால் தற்போது வரையிலும் கூலித் தொழிலாளியாக தான் தொடர்ந்து வருகிறார். ஒருவர் வேலை செய்தால் அதில் பணம் கிடைக்கும் என்ற ஒரு ஆதாயம் இருக்கும். ஆனால் தனது வயிற்றை நிரப்புவதற்காகவே பணிக்கு போகும் இந்த நபரை பார்த்து பலரும் கலங்கி தான் போய் வருகின்றனர்.