போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி திடீரென காய்கறி வியாபாரி ஒருவரை டிஎஸ்பி கட்டித் தழுவிய சம்பவமும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது. பணம், உணவு உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் ஒருவர் இருக்கும் போது அவர்களுக்காக உதவி செய்பவர்கள் தெய்வத்துக்கு சமமாக கருதப்படுவார்கள்.
அப்படி ஒரு பேருதவியை தான் தற்போது டிஎஸ்பியாக இருக்கும் ஒருவருக்காக செய்துள்ளார் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி. இந்த சம்பவத்தின் உருக்கமான பின்னணி என்ன என்பதை தற்போது பார்க்கலாம். மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் தான் சந்தோஷ் படேல்.
பழசை மறக்கல..
இவர் சமீபத்தில் போபால் பகுதியில் இருக்கும் காய்கறி கடை ஒன்றிற்கு அருகே திடீரென தனது ஜீப்பை நிறுத்த சொல்லியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அதிலிருந்து இறங்கி வந்த சந்தோஷ் பட்டேல் அங்கிருக்கும் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் சல்மான் கான் என்ற ஒருவரை கட்டித்தழுவி நெகிழ்ந்து போயுள்ளார். இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, சந்தோஷ் படேல் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் 14 ஆண்டுகளுக்கு முன்பு நன்கு தெரிந்தவர்கள் என தெரிகிறது.
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் படேல் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த நிலையில் உணவுக்கு கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சல்மான் கான் கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்டவற்றை பணம் உள்ளிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சந்தோஷ் படேலின் நிலையை பார்த்து இலவசமாக கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கொண்டு இரவு நேரத்தில் உணவு சமைத்து சந்தோஷ் படேல் உண்டதுடன் எதிர்காலத்தில் சில லட்சியங்களுடனும் வாழ்ந்து வந்துள்ளார்.
கண் கலங்கிய நெட்டிசன்கள்..
இதேபோல சல்மான் கானுக்கும் தன்னால் முடிந்த உதவியை சந்தோஷ் படேல் ஒரு காலத்தில் செய்து வந்துள்ளார். இப்படியே 14 வருடங்கள் போக, இத்தனை நாட்கள் கழித்து டிஎஸ்பியாக இருக்கும் சந்தோஷ் படேல், சல்மான் கானை மறக்காமல் நேரில் பார்க்க வேண்டும் என்றும் விரும்பியுள்ளார். இதற்காக போலீஸ் ஜீப்பிலேயே வந்து சல்மான் கானுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சந்தோஷ் படேல் முதலில் என்னை தெரியுமா என்றும் கேட்டுள்ளார்.
இதற்கு பதில் சொன்ன சல்மான் கான், ‘உங்களை எப்படி மறக்க முடியும்?’ என சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளார். முதலில் போலீஸ் ஜீப் வந்து நின்றதும் தான் பயந்ததாகவும் ஆனால் அதற்குள் இருந்து சந்தோஷ படேலை பார்த்த பின்னர் தான் நிம்மதி வந்ததாகவும் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார். இன்றைய காலத்தில் பலரும் உயர்ந்த இடத்திற்கு சென்ற பின்னர் கஷ்டப்பட்ட காலத்தில் உதவி செய்தவர்களை மறந்து போகும் நிலையில் சல்மான் கானை மறக்காமல் டிஎஸ்பி ஒருவர் தேடி வந்த விஷயம், இணையத்தில் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.