ஒவ்வொரு நபருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திலோ அல்லது ஒரு துறையிலோ அதிக ஈடுபாடு இருக்கும் என்பது பொதுவான ஒன்றுதான். சிலருக்கு சினிமா துறையில் பெரிய ஆளாக சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் இருக்கும். இதேபோல இன்னும் சிலர் ஐடி துறை, ஆட்டோமொபைல், விளையாட்டு என அதில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.
ஆனால் இதை தாண்டி ஒரு துறையின் மீது அதீத பிரியத்துடன் தன்னை சுற்றி இருக்கும் இடமும் அப்படியே இருக்க வேண்டும் என விரும்பிய ஒரு நபரை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு ஆட்டோ மொபைல் என்றால் அலாதி பிரியம் என்று தெரிகிறது. இதனால் அவரின் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் பைக் மற்றும் காரின் பாகங்கள் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது தான் தற்போது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
யமஹா பைக்ல சோஃபா..
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் பிரியம் சரஸ்வத் என்ற நபர் சமீபத்தில் கேரளாவில் இருந்த ஒரு வாலிபரின் வீட்டின் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடு முழுக்க முழுக்க கார் மற்றும் பைக்கின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் தான் உருவாக்கப்பட்டிருந்தது. அங்கே இருக்கும் தபால் பெட்டியும் யமஹா வண்டியின் டேங்காக இருக்க, அதே வண்டி அந்த வாலிபரின் வீட்டில் சோபாவாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் பஜாஜ் பைக்கின் ஹெட் லைட் பல்பாக இருக்க, கடிகாரம் தொடங்கி அனைத்து பொருட்களுமே பைக் மற்றும் காரைத்தான் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. இது தவிர கோவா முதலமைச்சர் தொடங்கி பலரிடம் வாங்கிய விருதுகள் அந்த வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் தாண்டி கிச்சனில் அவர்கள் சென்ற போது அங்கிருந்த பொருட்கள் தான் இன்னும் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது.
டைனிங் லேபிள்
டயர் மூலம் வாஷ் பேசின் தயார் செய்த அந்த வாலிபர், பைப்பிற்கு பதிலாக பெட்ரோல் பங்கில் இருக்கும் பைப்பை வைத்துள்ளார் அதே போல டைனிங் டேபிள் கூட நட்டு, போல்ட் உள்ளிட்ட பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தனது வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜை கூட கார் போலவே டிசைன் செய்துள்ள அந்த வாலிபர் புதிதாக ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கிய ஒரு பைக்கின் மூலம் ஒரு வாரத்தில் 1,000 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு உலக சாதனை படைத்திருந்த வண்டியையும் காண்பித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த இளைஞரை வியந்து பார்த்து வருகின்றனர். மேலும் முன்பு ஜேசிபி ஆபரேட்டராக இருந்த அந்த வாலிபர், பின்னர் கார் மற்றும் பைக் மீதிருந்த பிரியம் காரணமாக மெக்கானிக் வேலையை தாமாக பயின்று Garage வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.