மியான்மர் நாட்டை சேர்ந்த மோசடி கும்பல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என ஆசை வார்த்தை காட்டி, பலரை வரவழைத்துள்ளது. அதன் பின்னர், கிட்டத்தட்ட சிறையில் அடைத்து, ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைத்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு 300 இந்தியர்களை காப்பாற்றி, தாய் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் மூலம் வெளிநாட்டுக்கு ஆட்களை தேர்வு செய்வதாக போலியான விளம்பரங்கள் அறிவிக்கப்படுகின்றன. “லட்சக்கணக்கில் சம்பளம்” என்ற வாக்குறுதியை பார்த்து, ஆசைப்பட்டு பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவரும் மியான்மர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு, சிறைச்சாலை போல் உள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு, அங்கிருந்தே அவர்கள் ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து மியான்மர் சென்றவர்கள் எங்கே வேலை பார்க்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. இதுகுறித்து பெற்றோர்களின் புகாரை அடுத்து, அவர்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கியிருக்கலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. மியான்மர் நாட்டின் அரசு உதவியுடன், தற்போது 300 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் போர் விமானங்களில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியா மட்டுமின்றி, மொத்தம் 3,000 பேர் மோசடி கும்பலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தியாவைப் போல் அல்லாமல் சீன அரசு, மீட்டவுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.