வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே நிறுவனம் ஊழியர்கள் தினமும் 9.15 மணி நேரத்திற்கு மேல் பணி செய்ய வேண்டாம் என எச்சரிக்கை இமெயில் அனுப்பியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்ய வேண்டாம் என்றும், அதிகமாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்ப தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஊழியர்களிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
பெங்களூருவை தளமாக கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம், ஊழியர்களின் வேலை நேரத்தை கண்காணிக்கும் தானியங்கு அமைப்பை செயல்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் வேலை நேரமும் இதில் கண்காணிக்கப்படுகிறது. ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட 9 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்தால், இந்த அமைப்பு ஒரு அறிவிப்பை அனுப்பும், மேலும் மனிதவளத் துறை ஒரு முறையான எச்சரிக்கை மின்னஞ்சலை அனுப்பும். இந்த மின்னஞ்சலில், ஊழியரின் தொலைதூர பணி நாட்கள், மொத்தம் வேலை செய்த மணிநேரங்கள் மற்றும் தினசரி சராசரி வேலை நேரம் ஆகியவற்றின் விரிவான பகுப்பாய்வு அடங்கும்.
இன்ஃபோசிஸ் அனுப்பும் இமெயிலில் “ஆரோக்கியமான வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை பேணுவது உங்கள் நல்வாழ்வுக்கும், நீண்டகால தொழில்முறை வெற்றிக்கும் மிக முக்கியம். வேலை அழுத்தம் மற்றும் காலக்கெடு காரணமாக சில சமயங்களில் அதிக நேரம் வேலை செய்ய நேரிடலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், உற்பத்தித்திறனையும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் மேம்படுத்த ஒரு சீரான வேலை நேர திட்டத்தை பராமரிப்பது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த இன்ஃபோசிஸின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளதாவது:
வேலை நேரத்தில் வழக்கமான இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுதல்.
அதிகப்படியான வேலைப்பளுவை உணர்ந்தால் மேலாளர்களுக்கு தெரிவித்தல்.
பணிகளைப் பிரித்து வழங்குதல்
அலுவல் நேரம் அல்லாத வேளைகளில் வேலை தொடர்பான தொடர்புகளை குறைத்தல்.
இன்ஃபோசிஸின் இந்த நடவடிக்கை, இந்நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி இந்திய இளைஞர்கள் நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய பரிந்துரைக்கு ஒரு மறைமுகமான மறுப்பாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் நிறுவனரின் கருத்தை பின்பற்றாமல் இன்ஃபோசிஸ் வேறு பாதையில் செல்வதாக அறியப்படுகிறது.
இன்ஃபோசிஸின் வேலை நேரத்தை கண்காணித்து கட்டுப்படுத்தும் முடிவு ஊழியர்களின் நலனுக்கான ஒரு முக்கிய ஆரம்பம் என்று கூறப்பட்டாலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த துறையையும் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் இன்ஃபோசிஸ் தனது முடிவில் உறுதியாக உள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த முடிவு ஒட்டுமொத்த துறையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
