நெட்வொர்க்கை மையப்படுத்தப்படுத்தி போர் உத்திகள் அதிகரித்து வரும் இன்றைய உலகில், மோதல்களின் மையப்புள்ளியாக செயற்கைக்கோள்கள் மாறியுள்ளன. ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா அமைப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தகவல் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ராணுவ செயற்கைக்கோள்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. எதிர்கால மோதல்களில், எதிரி நாடுகள் தரையில் உள்ள இராணுவ இலக்குகளை தாக்குவதற்கு முன், நமது விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை தாக்கி செயலிழக்க செய்து, நாட்டை தகவல்தொடர்பு ரீதியாக முடக்க முயற்சிக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த அச்சுறுத்தலை சமாளிக்கவே இந்தியா, ‘வேதா’ (VEDA – Vehicle for Defence Application) என்ற ரகசிய விண்வெளி திட்டத்தை உருவாக்கி வருகிறது.
‘வேதா’ என்பது இந்திய பாதுகாப்புப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் ஒரு ராக்கெட் அல்லது ஏவுதல் வாகனம் ஆகும். இதன் முக்கிய நோக்கம், போர் காலத்தில் அல்லது அச்சுறுத்தல் நிறைந்த சூழ்நிலையில், குறுகிய கால அறிவிப்பிலேயே சேதமடைந்த அல்லது செயலிழந்த ராணுவ செயற்கைக்கோள்களை உடனடியாக மாற்றுவதுதான். இதன் மூலம், முக்கியமான நேரத்தில் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பில் எந்த தடங்கலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். தற்போது, செயற்கைக்கோள் ஏவுதலுக்கு இந்தியா பெரும்பாலும் இஸ்ரோவை நம்பியுள்ளது. ஆனால், ராணுவத்தின் பிரத்யேக தேவைகளுக்காகவும், இஸ்ரோவுக்கு ஒரு மாற்று ஆக ‘வேதா’ உருவாக்கப்பட்டு வருகிறது.
டிஆர்டிஓ, ஏற்கெனவே வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையான K4-ஐ அடிப்படையாக கொண்டு ‘வேதா’ திட்டத்தை வடிவமைத்துள்ளது. K4 ஏவுகணையை சிறிது மாற்றியமைப்பதன் மூலம், சுமார் 2,000 கிலோ எடையுள்ள ஏவுதல் வாகனம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், சுமார் 1,000 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோள்களை, பெரும்பாலும் கண்காணப்புக்குப் பயன்படும் செயற்கை சிந்தடிக் அப்பர்ச்சர் ரேடார்கள் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் இமேஜிங் செயற்கைக்கோள்கள் போன்றவற்றை, புவியின் தாழ்வான சுற்றுப்பாதையில் மிக குறுகிய அறிவிப்பில் ஏவ முடியும்.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ பயன்படும் கேனிஸ்டர் அடிப்படையிலான அல்லது மொபைல் ஏவுதளங்களை போலவே, ‘வேதா’ திட்டமும் மொபைல் ஏவுதல் திறனை அடைய முயல்கிறது. இதன் இறுதி இலக்கு, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பிரத்தியேக ஏவுதளங்களை சார்ந்து இருக்காமல், நாட்டின் எந்தவொரு கடற்கரை பகுதியிலிருந்தும் அவசர காலங்களில் ராணுவ செயற்கைக்கோள்களை ஏவும் திறனை உருவாக்குவதுதான். இந்த கருத்து கடந்த சில ஆண்டுகளாகவே இருந்தாலும், தற்போது இத்திட்டம் முதிர்ச்சி அடைந்து வருகிறது. இதன் முதல் தொழில்நுட்ப செயல்விளக்கம் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகலாம் என்றாலும், நெட்வொர்க் போர் முறைக்கு இது அவசியமானதாகும்.
இந்திய அரசு அடுத்த சில ஆண்டுகளில் 52 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது. இதில் பெரும்பாலானவற்றை தனியார் துறையே வடிவமைத்து உருவாக்கவுள்ளது. கண்காணிப்பு மற்றும் பிற இராணுவ பயன்பாடுகளுக்கான இந்த அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும். போர் காலங்களில் சேதம் ஏற்பட்டால், அவற்றை ஈடுகட்ட தேவையான உதிரி செயற்கைக்கோள்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். விண்வெளி சார்ந்த இந்த சவால்களை சமாளிக்க, டிஆர்டிஓ-வும் தனியார் துறையும் இணைந்து ராணுவ செயற்கைக்கோள் மேம்பாடு, ஏவுதல் மற்றும் விண்வெளியில் அவற்றை பாதுகாத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைந்த அணுகுமுறையின் கீழ் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்தியாவின் இந்த ‘வேதா’ திட்டம், பாதுகாப்பு தேவைகளுக்கு தேவையான விண்வெளி ஆதிக்கத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான அடியாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
