உலக அளவில் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தும் முக்கிய நகர்வாக, இந்தியா தனது தேசிய உள்கட்டமைப்பு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கியை (NaBFID) ஒரு வலுவான உலகளாவிய நிதி நிறுவனமாக மாற்றியுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உள்கட்டமைப்பு தேவைகளுக்காக 2021 இல் உருவாக்கப்பட்ட NaBFID, இப்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி (IDB) என்ற புதிய பெயருடன் சர்வதேச அளவில் தனது செயல்பாடுகளை விரிவாக்க தயாராகி வருகிறது. இந்த மறுசீரமைப்பு, உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான ஒரு நம்பகமான மாற்று நிதி ஆதாரத்தை வழங்குவதே பிரதான இலக்காகும்.
இந்தியாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு நீண்ட கால மற்றும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்த குறையை நிவர்த்தி செய்யவே நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டில் NaBFID உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம், நீண்ட கால திட்டங்களுக்கான கடன்களை வழங்குவதாகும். பொதுவாக, வணிக வங்கிகள் இத்தகைய நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்ய தயங்குகின்றன. ஏனெனில், திட்ட தாமதங்கள் வங்கிகளுக்கு செயல்படாத சொத்துக்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. இந்த சுமையை குறைக்கும் வகையில் NaBFID செயல்படுகிறது.
NaBFID ஒரு வலிமையான மூலதன அடித்தளத்தை கொண்டுள்ளது. இதன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1 லட்சம் கோடி ஆகும். ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.20,000 கோடியாகும். இது இந்தியாவில் தொடங்கப்பட்டதிலேயே மிக அதிக மூலதனம் கொண்ட நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், NaBFID என்பது தேசிய உள்கட்டமைப்பு (NIP) திட்டத்தின் கீழ் உள்ள சுமார் $2.6 டிரில்லியன் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீடுகளை மேற்பார்வையிடுவதிலும், நிதியளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்பாகும்.
ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளரும் நாடுகள் தங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியைப் பெறுவதில் நீண்ட காலமாக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற மேற்குலகை சார்ந்த நிறுவனங்களிடம் நிதியுதவி பெறும் போது, கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேபோல, சீனாவிடம் அணுகும் நாடுகள், கடன் பொறியில் சிக்குவதாகவும், நிபந்தனைகள் வெளிப்படையானதாக இல்லை என்றும் விமர்சனங்கள் உள்ளன.
இந்த நேரத்தில் தான் இந்தியாவின் இந்த புதிய IDB வங்கி, மேற்கண்ட நிதி மாதிரிகளிலிருந்து வேறுபட்டு செயல்படத் திட்டமிட்டுள்ளது. IDB, உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் போது, எந்தவொரு அரசியல் அல்லது புவிசார் அரசியல் நிபந்தனைகளையும் விதிக்காது. மேலும், நீடித்த மற்றும் நடைமுறை சாத்தியமான திட்டங்களுக்கு மட்டுமே இது நிதியளிப்பதில் கவனம் செலுத்தும். அதிக செலவு பிடிக்கும் ஆடம்பரமான திட்டங்களுக்கு பதிலாக, ஜன தன, ஆதார், மொபைல் போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் சிறிய, அதிக தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது நாடுகள் கடன் வலையில் சிக்குவதை தடுக்க உதவும்.
பலதரப்பட்ட உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. IDB-யின் உருவாக்கம், இந்தியா வெறுமனே கோரிக்கைகளை மட்டும் வைக்காமல், மேற்குலகின் பல்தரப்பு நிறுவனங்களுக்கு ஒரு நடைமுறைக்குரிய மாற்று வழியை உருவாக்குவதையும், தனது சொந்தத் திறனை காட்டுவதையும் நிரூபிக்கிறது. IDB-யின் எழுச்சி, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு மற்றும் இப்ஸா (IBSA) போன்ற கூட்டு முயற்சிகளுடன் இணைந்து, உலகளாவிய தெற்கின் நிதி மற்றும் புவிசார் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியா ஒரு முக்கிய தலைமைக் குரலாக உருவெடுக்க உதவும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
