இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் கனரக லாரிகளுக்கான முதல் பரிசோதனை தொடங்கியது. இந்த பரிசோதனையை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கனரக லாரிகள் தயாரிப்புக்கான ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ்க்கு தேசிய ஹைட்ரஜன் திட்டம் அனுமதி அளித்திருந்தது.
ரூ.19,744 கோடி நிதியுடன் இந்த திட்டம், இந்தியாவை ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் பல்வேறு துறைகளில் பயன்பாட்டு மையமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கனரக லாரிகள் பரிசோதனை கட்டம் 24 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும், வெவ்வேறு சுமை கொள்ளளவுகளுடன் 16 மேம்பட்ட ஹைட்ரஜன் வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த லாரிகள் H2-ICE மற்றும் H2-FCEV தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மும்பை, புனே, டெல்லி-NCR, சூரத், வதோதரா, ஜம்ஷெட்பூர் மற்றும் கலிங்கநகர் உள்ளிட்ட முக்கிய சரக்கு போக்குவரத்து பாதைகளில் பரிசோதனை செய்யப்படும்.
300-500 கிமீ இயக்கத் திறனுடன், இந்த வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் குறைந்த செலவில் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், இந்த லாரிகள் சிறப்பான பிரிமா கேபின்களையும், மேம்பட்ட ஓட்டுநர் உதவி பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளன. இதனால் ஓட்டுநர்களுக்கு அதிக வசதி, குறைந்த மன அழுத்தம் கிடைக்கின்றன.