அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதித்ததால், இந்திய மக்களிடையே அமெரிக்க எதிர்ப்பு மனநிலை வலுப்பெற்றுள்ளது. மகாத்மா காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் போல, தற்போது ‘அமெரிக்க நிறுவனங்களே வெளியேறு’ என்ற புதிய போராட்டம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தையும், மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்குமாறு தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அமேசான் வேண்டாம், ‘அண்ணாச்சி கடை’ போதும்
டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் ‘அமேசான் வேண்டாம், அண்ணாச்சி கடை போதும்’ என்ற பிரசாரம் வைரலாகி வருகிறது. அமேசான் உட்பட எந்த அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திலும் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக உள்ளூர் கடைகளிலும், சிறு வணிகர்களிடமும் பொருட்களை வாங்கி, நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த மனநிலை, இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, உணவு மற்றும் பான உற்பத்தி நிறுவனங்களுக்கும் பரவியுள்ளது. கோகோ-கோலா மற்றும் பெப்சி போன்ற அமெரிக்க பானங்களை புறக்கணித்து, அதற்கு பதிலாக உள்ளூர் தயாரிப்புகளான டொரினோ, காளி மார்க், பவண்டோ போன்ற பானங்களை ஊக்குவிக்க வேண்டும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ட்ரம்பின் பேச்சும் இந்தியர்களின் பதிலடியும்
“தன் வாயால் கெட்டார் டிரம்ப்” என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. தேவையில்லாமல் இந்தியாவுக்கு வரி விதித்து, தன் நாட்டிற்கும், மக்களுக்கும் பொருளாதார இழப்பை ஏற்படுத்திக்கொண்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். “வெள்ளையனே வெளியேறு என்பது காந்தி காலம்; அமெரிக்க நிறுவனங்களே வெளியேறு என்பது மோடி காலம்” என்ற முழக்கம், டிரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியர்களின் ஒற்றுமையை காட்டுவதாக அமைந்துள்ளது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி என்றால் இந்தியர்கள் மிரண்டால் அமெரிக்கா தாங்காது” என்ற புதிய மொழி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இது, 140 கோடி இந்திய மக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. டிரம்ப் விதித்த இந்த வரி, அமெரிக்காவுக்கு எதிரான ஒரு ஒட்டுமொத்த மக்கள் மனநிலையை இந்தியாவில் உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
