அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் நடந்த நிகழ்வுகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்நாட்டு இளைஞர்களின் கோபத்தால் வெடித்த போராட்டங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை வெளியேற்ற வழிவகுத்துள்ளன. இது நேபாளத்தின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆனால், இந்த சம்பவம் வெறும் உள்நாட்டு பிரச்சனை மட்டுமா? அல்லது இதன் பின்னணியில் சர்வதேச சக்திகளின் சதி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த குழப்பம், சர்வதேச சக்திகளால் திட்டமிடப்பட்ட ஒரு சதி (Proxy Warfare) என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ, உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை அகற்றி, தங்களுக்கு சாதகமான பொம்மை அரசாங்கங்களை நிறுவி வருகிறது. இதன் மூலம், அந்த நாடுகளின் வளங்களையும், அரசியல் முக்கியத்துவத்தையும் அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.
நேபாளத்தில் இந்த கலவரத்தை தூண்டியவர்கள் சமூக ஊடகங்களில் பிரபலமான இளைஞர் குழுக்கள். அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை முறைதான் தங்கள் வறுமைக்கு காரணம் என்று அவர்கள் இளைஞர்களை தூண்டிவிட்டனர். ஆனால், இது ஒரு சர்வதேச அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ‘நரேட்டிவ் வார்ஃபேர்’ என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கு முன், வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வந்தவர். அமெரிக்கா சென் மார்ட்டின் தீவை இராணுவ தளமாகப் பயன்படுத்த கோரியபோது, அவர் மறுத்தார். அதன் விளைவாக, அவர் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கும் அமெரிக்காவின் சிஐஏவின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
நேபாளம், இந்தியாவுடன் 1751 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்கிறது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்துடன் எல்லையை கொண்டுள்ளன. எனவே, நேபாளத்தில் ஏற்படும் எந்தவொரு உள்நாட்டு கலவரமும் இந்தியாவுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமையும்.
பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதிகள், காஷ்மீரில் ஊடுருவ முடியாததால், நேபாளம் மற்றும் மியான்மார் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். நேபாளத்தில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டால், இந்த பயங்கரவாதிகள் எளிதாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது.
இந்தியா, உலக அரங்கில் ஒரு வலிமையான சக்தியாக வளர்ந்து வருகிறது. டிரம்ப் நிர்வாகம், “மோடி எனது நண்பர்” என்று கூறினாலும், அமெரிக்கா தனது வர்த்தக நலன்களுக்காக இந்தியாவை மிரட்ட நினைக்கிறது. நேபாளத்தில் பதட்டமான சூழலை உருவாக்குவது, இந்தியாவை பணிய வைக்க ஒரு முயற்சி என கருதப்படுகிறது.
நேபாள இளைஞர்களின் கொந்தளிப்பை காட்டி, அதேபோன்ற ஒரு நிலை இந்தியாவில் உள்ளதாகவும், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இந்திய இளைஞர்கள் போராட வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள் நடக்கின்றன. ஆனால், இந்த முயற்சி இந்தியாவில் பலிக்காது. ஏனெனில் அமெரிக்காவுக்கு அப்பனான ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியையே இந்தியா பார்த்துள்ளது.
ஜி20 நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைவாக, சுமார் 2% ஆக உள்ளது. மத்திய அரசு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா மற்றும் முத்ரா யோஜனா போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இந்தியா, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வென்ற நாடு. இந்திய இளைஞர்கள் சுயமரியாதையும், சுய சிந்தனையும் கொண்டவர்கள். எனவே, நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் நடப்பது போல, ஒரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலுக்கு இந்திய இளைஞர்கள் பலியாக மாட்டார்கள். அமெரிக்காவின் சூழ்ச்சிகள் இங்கு பலிக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நெருக்கடி ஒரு சவாலாக இருந்தாலும், அதை இந்தியா நிச்சயம் கடந்து வரும்.
பொதுவாக இந்திய இளைஞர்கள் சிறு வயதில் இருந்தே நாட்டுப்பற்றுடன் வளர்ந்தவர்கள், இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைவதை கூட ஏற்று கொள்ள மாட்டார்கள், அப்படிப்பட்ட இளைஞர்களை தாய்நாட்டிற்கு எதிராக தூண்டுவது என்பது நடக்கவே நடக்காது. அமெரிக்காவின் சிஐஏ இந்த விஷயத்தில் மூக்குடைபடுவது நிச்சயம். மேலும் இந்திய இளைஞர்களை தூண்ட முயற்சித்தால், அது அமெரிக்க இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகி அமெரிக்காவிலேயே புரட்சி நடைபெறவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
