ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் நிரந்தரமாக மூடப்படுகிறதா? அப்படியெனில் இனி Unreserved டிக்கெட்டுக்களை எப்படி எடுப்பது? வருகிறது மிகப்பெரிய மாற்றம்..!

நவீனமயமாக்கல் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கில், இந்திய ரயில்வே நிர்வாகம், தற்போதுள்ள நிரந்தர பொது டிக்கெட் கவுன்டர்களை படிப்படியாக மூட தொடங்கியுள்ளது. அத்துடன், இந்த கவுன்டர்களில் பணிபுரிந்த ஊழியர்களை ரயில்வேயின் பிற முக்கிய துறைகளுக்கு…

railway

நவீனமயமாக்கல் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கில், இந்திய ரயில்வே நிர்வாகம், தற்போதுள்ள நிரந்தர பொது டிக்கெட் கவுன்டர்களை படிப்படியாக மூட தொடங்கியுள்ளது. அத்துடன், இந்த கவுன்டர்களில் பணிபுரிந்த ஊழியர்களை ரயில்வேயின் பிற முக்கிய துறைகளுக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் டிக்கெட் விற்பனை முறையில் ஒரு புதிய அத்தியாயமாக, இனி தனியார் முகவர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் UTS (முன்பதிவு இல்லாத டிக்கெட் அமைப்பு) உதவியாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

ஒரு சோதனை திட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில், குறிப்பாக கேரளாவில், Unreserved டிக்கெட்டுகளை வழங்குவதற்காக மொபைல் UTS உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உதவியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் நிரந்தர கவுன்டர் ஊழியர்களை சார்ந்திருக்கும் பணி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், இது படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு விரைவில் நிரந்தரமாக Unreserved டிக்கெட்டுக்கள் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய ரயில்வே கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே டிக்கெட் விற்பனையில் தனியார் பங்களிப்பை படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. அவற்றில் சில இதோ:

1. ஜன் சாதாரன் டிக்கெட் முன்பதிவு சேவக் (JTBS) கவுன்டர்கள்: இவை பொதுமக்களுக்கு டிக்கெட் பெறும் வசதியை எளிதாக்குகின்றன.

2. தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ATVMs): ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களால் இயக்கப்படும் இவை, டிக்கெட் வாங்கும் நேரத்தை குறைக்கின்றன.

3. நிலைய டிக்கெட் முன்பதிவு முகவர்கள் (STBAs): கமிஷன் அடிப்படையில் செயல்படும் இவர்கள், கிராமப்புற மற்றும் சிறிய நிலையங்களில் டிக்கெட் விற்பனைக்கு உதவுகிறார்கள்.

மேற்கண்ட ஏற்பாடுகள் Unreserved டிக்கெட் விற்பனையை சீராக்கி, பணியாளர் செலவுகளை குறைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

ரயில்வே, பயணிகள் முன்பதிவு அமைப்பு கவுன்டர்களை, ஒருங்கிணைந்த முன்பதிவு இல்லாத டிக்கெட் அமைப்பு கவுன்டர்களாக மாற்றுவதன் மூலம், பணியாளர் தேவைகளை குறைக்கத் தொடங்கியது. இந்த இரட்டை செயல்பாடு கொண்ட கவுன்டர்கள், குறிப்பிட்ட நேரங்களில் முன்பதிவு சேவைகளையும், மற்ற நேரங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் விற்பனையையும் கையாள்கின்றன.

இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், நிரந்தர ஊழியர்களை கவுன்டர் பணிகளில் இருந்து, விடுவித்து, ரயில்வேயின் மற்ற பகுதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகும். அதே நேரத்தில், டிக்கெட் விற்பனை செயல்திறனை மேம்படுத்துதல், நிர்வாக செலவுகளைக் குறைத்தல் மற்றும் தொழில்நுட்பம், அத்துடன் ஒப்பந்த மனிதவளத்தை மேலும் திறம்பட பயன்படுத்துதல் ஆகியவற்றையும் ரயில்வே நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் ரயில்வேயின் செயல்பாடுகளை இன்னும் நவீனமயமாக்கி, பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.