அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், ஆனால் பிரதமர் மோடி அவரது அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மன் நாளேடான Frankfurter Allgemeine Zeitung வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவல் பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்நாளேட்டின்
அறிக்கையின்படி, டிரம்ப் நான்கு முறை பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் மோடி தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்றும், மோடியின் இந்த நிராகரிப்பு, டிரம்பின் சில நடவடிக்கைகளால் அவர் அதிருப்தியில் இருந்ததை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தின் உச்சகட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு அதிக வரி விதித்திருந்த சூழலிலும், இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் ஏற்பட்ட அதிருப்தியும் இந்த பதற்றத்திற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. அமெரிக்கா பாதுகாப்பு மற்றும் எரிசக்திக்கு ரஷ்யாவை சார்ந்திருப்பதற்காக இந்தியாவை விமர்சித்ததும் இந்த சூழலில் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வரி சவால்களை எதிர்கொள்ள இந்தியா தனது பலத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி ஒரு நிகழ்வில் பேசியது டிரம்புக்கான மறைமுக செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
நாம் என்ன சொன்னாலும் இந்தியா கேட்கும் என்று அமெரிக்கா நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது என்றும், இது மோடியின் இந்தியா மற்றும் இளைஞர்களின் எழுச்சி இந்தியா என்பதால் அமெரிக்கா உள்பட எந்த வல்லரசுவின் கட்டளைகளுக்கும் இந்தியா அடிபணியாது என்றும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து மூன்று முறை இந்திய மக்களின் ஆதரவை பெற்று ஆட்சியில் இருக்கும் மோடியை அசைத்து பார்க்கலாம் என்று நினைத்தால் அதுவே பகல் கனவு தான் என்றும் மோடியுடன் அனுசரித்து செல்வதுதான் ட்ரம்புக்கும் அவரது நாட்டுக்கும் நல்லது என்றும் இதுவரை மோடியை அனுசரித்து சென்ற நாடுகள் எல்லாமே நல்ல பலன்களை பெற்று வருகிறது என்றும் அதேபோல் அமெரிக்காவும் தனது முடிவை மாற்றி இந்தியா உடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்தியாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை அமெரிக்காவுக்கு தான் நஷ்டம் என்றும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
