அசாம் மாநிலத்தின் கோக்ராஜார் மற்றும் பூட்டானின் ஜிலேபு இடையே ஒரு புதிய ரயில்பாதை பணி விரைவில் தொடங்கவுள்ளது.அசாம் மற்றும் பூட்டான் இடையிலான இணைப்பை அதிகரிக்கவும், இரு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த பாதை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 25ஆம் தேதி குவாஹாட்டியில் நடைபெற்ற ‘Advantage Assam 2.0’ முதலீட்டு மற்றும் பணியாளர்கள் மாநாட்டில், ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
மொத்தம் 69.04 கிமீ நீளமுள்ள இந்த புதிய ரயில் பாதை, அசாமின் கோக்ராஜார் நிலையத்திலிருந்து பூட்டானின் ஜிலேபு வரை செல்லும். ரூ.3,500 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாதையில் பாலஜான், கருபாசா, ரூனிகட்டா, ஷாந்திபூர், தாட்கிரி மற்றும் ஜிலேபு என ஆறு புதிய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த பாதையில் 2 பெரிய பாலங்கள் மற்றும் 29 முக்கியமான பாலங்கள், 65 சிறிய பாலங்கள், ஒரு சாலை மேம்பாலம், 39 சாலை கீழ் பாலங்கள், 11 மீட்டர் நீளமுள்ள இரண்டு வயடக்டுகள் (viaducts) உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த புதிய ரயில் பாதை, இந்தியா-பூட்டான் இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தை அதிகரித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.