இந்தியா முழுவதும் தனியார் மயமாக்கப்படுகிறதா மின்சார துறை? அதானி, டாடா நிறுவனங்கள் களத்தில் இறங்க வாய்ப்பு.. இனி மின் கட்டணம் உச்சத்திற்கு செல்லுமா? ரூ.56,000 கோடி கடனில் மின்துறை.. வேற வழியே இல்லை..!

பெரும்பாலான மாநிலங்களில் அரசு நடத்தும் விநியோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சில்லறை மின்சார சந்தையை நாடு முழுவதும் தனியார் நிறுவனங்களுக்காக திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு மசோதாவை…

electricity

பெரும்பாலான மாநிலங்களில் அரசு நடத்தும் விநியோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சில்லறை மின்சார சந்தையை நாடு முழுவதும் தனியார் நிறுவனங்களுக்காக திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு மசோதாவை மத்திய மின் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த நகர்வு, அதானி எண்டர்பிரைசஸ், டாடா பவர், டோரண்ட் பவர், சிஇஎஸ்சி போன்ற தனியார் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் தங்கள் செயல்பாட்டை வலுப்படுத்திக்கொள்ள அனுமதிக்கும்.

தற்போதுள்ள மின்சார சட்டம், ஒரே பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் சில்லறை மின்சார விநியோகத்தில் ஈடுபட வழிவகை செய்யவில்லை. மத்திய அமைச்சகத்தின் இந்த வரைவு முன்மொழிவு, ஒரே விநியோக பகுதியில் பல தனியார் நிறுவனங்களை அனுமதிக்க கோருகிறது.

தற்போது, தேசிய தலைநகர் பகுதி, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற தொழில்துறை மாநிலங்கள் உட்பட சில விநியோக மண்டலங்களில் மட்டுமே மின்சார விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், தற்போதுள்ள விதிகள் இதற்கென தனியாக வழிவகை செய்யவில்லை.

இந்தியாவின் மின் விநியோக துறை நிதி ரீதியாக மிகவும் அழுத்தத்தில் உள்ள துறைகளில் ஒன்றாகும். இதனால், அரசு மின்சார நிறுவனங்களின் இழப்புகளை குறைக்கவும், அவற்றின் நிதிநிலையை சீராக்கவும், பழமையான உட்கட்டமைப்பை தரம் உயர்த்தவும் மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஜூன் 2025 நிலவரப்படி, மாநில மின் நிறுவனங்கள், மின் உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ.56,000 கோடிக்கு மேல் தொகையை கடன்பட்டுள்ளன. இந்த கடன் சுமை, சுதந்திர மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த மின்துறைக்கும் கடன் ஓட்டத்தை தடுக்கிறது.

முன்னதாக 2022-ம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு முயற்சியை மத்திய அரசு எடுத்தபோது, மாநில விநியோக நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவு மசோதா, மாநில அரசுகள் மற்றும் அரசு விநியோக நிறுவனங்களிடமிருந்து மீண்டும் எதிர்ப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்திய மின்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், தனியார் முதலீட்டை ஈர்க்கவும் இந்த சீர்திருத்தம் மிகவும் அவசியமானது என்று மத்திய அரசு கருதுகிறது.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், மின் விநியோக துறையில் பெரிய போட்டி உருவாகி, அதன்மூலம் நுகர்வோருக்கு சிறந்த சேவை மற்றும் நியாயமான கட்டணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தலையில் கூடுதல் சுமையாகும் வாய்ப்பும் உள்ளது.