“போராட்டம் கடுமையாகும்போது, உறுதியானவர்கள் களத்தில் இறங்குவார்கள்” என்ற பழமொழி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சிறப்பாக பொருந்தியுள்ளது. அமெரிக்கா இந்தியா மீது கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வரிகளை விதித்தது. சில பொருட்களுக்கு 50% வரை விதித்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி அவ்வளவுதான் என எதிரி நாடுகளும், இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. ஒரு மாதத்தில், இந்திய ஏற்றுமதி வீழ்ச்சியடைந்திருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது நடக்கவில்லை என்பதே உண்மை.
மாறாக, இந்தியா இந்த பொருளாதார நெருக்கடியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த தீர்மானித்தது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி குறையவில்லை, மாறாக அது ஏறக்குறைய 7% உயர்ந்து, $35 பில்லியனை தொட்டது.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல், அமெரிக்கா கிட்டத்தட்ட அனைத்து இந்திய இறக்குமதிகள் மீதும் 25% வரி விதித்தது. சில வாரங்களுக்கு பிறகு, மலிவு விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக இந்தியா மீது மேலும் 25% அபராதம் விதிக்கப்பட்டது. இந்த இரண்டும் சேர்ந்து, அமெரிக்காவிற்குள் நுழையும் இந்திய பொருட்களின் மீது மொத்தம் 50% சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்தியா சந்திக்காத மிக உயர்ந்த வரி இதுவாகும். அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருப்பதால், இது ஒரு சிறிய அடியல்ல.
ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் இங்கே தான் ஆட்டத்தை மாற்றினர். அவர்கள் அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்காமல், தங்கள் வர்த்தக உத்தியை மற்ற நாடுகளின் பக்கம் தீவிரமாக திருப்பினர். சீனா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் , ஹாங்காங், தென்னாப்பிரிக்கா, இத்தாலி, நேபாளம், பங்களாதேஷ் என உலகிலுள்ள மற்ற எல்லா நாடுகளிலும் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கினர்.
சீனாவிற்கு ஏற்றுமதி: 22% உயர்வு
ஹாங்காங்கிற்கு: 62% உயர்வு
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு: 23% உயர்வு
நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இத்தாலிக்கு: சுமார் 18% முதல் 20% வரை வளர்ச்சி
மின்னணுவியல் பொருட்கள், பொறியியல் சாதனங்கள், மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட பல துறைகள் உலகளாவிய சந்தைகளில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன.
இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க வரிகளை தவிர்ப்பதற்காக மற்ற நாடுகள் வழியாக பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியுமா என்று ஆலோசனை செய்து வருகின்றனர். உதாரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பாட்டிலை சிங்கப்பூர் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பினால், அது 50% வரியைச் சந்திக்கும். ஆனால், இந்தியா அதே பாட்டிலின் மூலப்பொருட்களை மட்டும் சிங்கப்பூருக்கு அனுப்பி, அந்த பாட்டில் அங்கேயே உண்மையில் தயாரிக்கப்பட்ட்டு, அது அதிகாரப்பூர்வமாக ஒரு சிங்கப்பூர் தயாரிப்பாகி, அமெரிக்காவுக்கு அனுப்பினால் அப்போது 10% மட்டுமே வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் அதே நேரத்தில் உண்மையான சவால் இன்னும் இருக்கிறது. அமெரிக்கா கடந்த மாதம் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதித்துள்ளது. அத்துடன், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கும் வரி விதித்துள்ளது. இதன் முழுமையான தாக்கம் அக்டோபர் வர்த்தக தரவுகளில் தெரியும். இந்த நிலை தொடர்ந்தால், பின்வரும் இரண்டு விஷயங்களில் ஒன்று நடக்கலாம்:
ஒன்று இந்தியா அமெரிக்காவை சார்ந்திருப்பதை வெகுவாக குறைத்து, மேலும் பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதி தளத்தை உருவாக்கும். இரண்டு இந்த வரிகள் இந்தியாவை தனிமைப்படுத்தவில்லை, மாறாக மற்ற எல்லா நாடுகளுடனும் ஆழமான வர்த்தக பங்காளராகத் தள்ளுகிறது என்பதை அமெரிக்கா உணரும்.
புவிசார் அரசியலில், அழுத்தம் உங்களை நசுக்கலாம் அல்லது உங்களை விரிவடைய தூண்டலாம். இப்போதைக்கு, இந்தியா விரிவடைந்து பன்முகப்படுத்தலை தேர்ந்தெடுத்துள்ளது தெளிவாகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
