மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை இந்தியாவின் குக்கிராமங்கள் வரை கொண்டு செல்லும் நோக்கில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கமான ‘AMFI’ ஒரு புதிய புரட்சிகரமான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களாக செயல்பட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை காட்டிலும் ஏழு மடங்கு அதிக கிளைகளை கொண்டுள்ள இந்திய அஞ்சல் துறையின் பரந்த கட்டமைப்பை பயன்படுத்தி, சாதாரண மக்களிடமும் முதலீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த திட்டம் முயல்கிறது. முதற்கட்டமாக, புரிந்துகொள்வதற்கு எளிமையான லிக்விட் ஃபண்டுகள், ஹைப்ரிட் ஃபண்டுகள் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் போன்றவற்றை மட்டும் தபால்காரர்கள் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை சுமார் 71 தபால்காரர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் NISM 5A எனப்படும் கட்டாய தேர்வு எழுத தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
காலமாற்றத்திற்கு ஏற்ப தபால் விநியோகம் குறைந்து வரும் நிலையில், பாரம்பரியமான அஞ்சல் துறையை நவீன நிதிச்சந்தையுடன் இணைக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கமான ‘AMFI’ உடன் இணைந்து சுமார் ஒரு லட்சம் தபால்காரர்களை மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களாக மாற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களின் பெருக்கத்தால் கடிதங்கள் அனுப்பும் வழக்கம் வெகுவாக சரிந்துள்ள சூழலில், அஞ்சலகங்களை மூடுவதற்கு பதிலாக, அங்கிருக்கும் ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் கூடுதல் வருமானத்தையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டம் தபால் ஊழியர்களுக்கு வேலை பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கூடுதல் கமிஷன் மூலம் தங்களது தனிப்பட்ட வருமானத்தை உயர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. முதற்கட்டமாக, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய லிக்விட் ஃபண்டுகள், ஹைப்ரிட் ஃபண்டுகள் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் போன்றவற்றை மட்டும் தபால்காரர்கள் மூலம் விற்பனை செய்யப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ஊழியர்கள் ‘NISM’ எனப்படும் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தின் கட்டாய தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் இதற்கான பயிற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில், டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களை KYC மற்றும் முதலீட்டு முறைகள் குறித்து தபால்காரர்களுக்கு விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அஞ்சலகங்கள் வெறும் கடித பரிமாற்ற இடமாக மட்டுமில்லாமல், முழுமையான நிதிச்சேவை மையங்களாக உருமாறுகின்றன.
இருப்பினும், இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில நடைமுறை சவால்களும் உள்ளன. தபால்காரர்கள் இதுவரை அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் போன்ற அசல் தொகைக்கு முழு உத்தரவாதம் தரும் திட்டங்களையே மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் என்பது சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதால், பங்குச்சந்தை சரியும் காலங்களில் கிராமப்புற முதலீட்டாளர்களுக்குத் தகுந்த விளக்கம் அளித்து அவர்களை தக்கவைப்பது தபால்காரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
தொழில்நுட்ப ரீதியாக தபால்காரர்களை தயார்படுத்தி, மண்டல வாரியாக இத்திட்டத்தை செயல்படுத்தினால், இது இந்திய நிதித்துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
