உலகத்தில் என்ன நடந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி பாதையில் எந்தவிதமான தடையும் இருக்காது. இந்தியாவை பொறுத்தவரை, பொருளாதாரம் மற்றும் அரசியல் என பல விதங்களில் இணைக்கப்பட்ட ஒரு பிரதேசம். இந்தியாவை பொறுத்தவரை, ஒரு பொருளாதார தன்னிறைவு உள்ள நாடு. இங்கே மழை நன்றாக பெய்கிறது. நிறைய உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளர்ந்து வரும் நாடுகளில் இதுவும் ஒன்று. உள்நாட்டு கட்டமைப்பும் மிகவும் வலுவாக உள்ளது. இப்போதைக்கு, பணவீக்கம் குறைவாக உள்ளது. கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டு வருகிறது.
எல்லாமே இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலைதான் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்காமல் தான், அமெரிக்கா இந்தியா மீது வன்மம் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கலாம் என நினைக்கிறது. ஆனால், இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்கா உட்பட எந்த நாடும் தடுக்க முடியாது. இந்தியா முழுமையான பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற நாடு.
இந்தியாவுக்கு ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் என்பது மிகவும் குறைவு. முழுவதுமாக ஏற்றுமதி நிறுத்தப்பட்டால் கூட, இந்தியாவின் பொருளாதாரம் எந்த வகையிலும் பாதிப்பு அடையாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 330 லட்சம் கோடி ஆகும். அதில் ஏற்றுமதி என்பது மிகவும் குறைவானது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்த மதிப்பு 70 முதல் 80 பில்லியன் டாலர் மட்டுமே. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், ஏற்றுமதியின் பங்கு வெறும் இரண்டு சதவீதம் தான். அந்த இரண்டு சதவீதத்தில் கூட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது வெறும் 20% தான். எனவே, அந்த இரண்டு சதவீத ஏற்றுமதியும் முழுமையாக நின்றால் கூட, 98% வரை இந்தியாவுக்கு வலுவான ஒரு அம்சமாகத்தான் இருக்கும்.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் மரபணு மாற்றப்பட்ட விவசாய பொருட்கள் உட்பட பல பொருட்கள் பயிரிடப்படுகின்றன. அந்த பொருட்களை எல்லாம், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிடம் விற்க வேண்டும் என்றுதான் விவசாய முதலாளிகள் டிரம்ப்புக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனால் தான் டிரம்ப், இந்தியாவிடம் இந்த பொருட்களை எல்லாம் வாங்கி கொள்ளுங்கள், அதுவும் வரி இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளுங்கள் என்று நிர்பந்தம் செய்கிறார்.
ஆனால், இந்தியா 1989 ஆம் ஆண்டிலிருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்ற கொள்கையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உரம், மானியம், இலவச மின்சாரம் உள்ளிட்டவை கொடுத்த போதிலும், அவர்கள் இன்னும் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் இருக்கிறார்கள். எனவே, அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்தால், இந்திய விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை அடைவார்கள் என்பதால், பிரதமர் மோடி, “வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது, அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயார்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதான் டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தி, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், இந்த நெருக்கடி எல்லாம் சந்திக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு தைரியம் இருக்கிறது என்றும், இந்தியாவை எந்த நாடும் அசைக்க முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
