உலகில் வல்லரசு நாடுகள் என்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், கனடா என்று மளமளவென சொல்வார்கள். இந்தியாவும் வல்லரசு நாடாக மாறிவிட்டாலும் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் பல கோடி மக்கள் வாழ்கின்றனர். ஒரு நாடு எப்போதும் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, இராணுவம் ஆகியவற்றில் தன்னிறைவு அடைகிறதோ அப்பொழுதுதான் அந்நாடு வல்லரசாக உயர்வு பெறும்.
அந்த வகையில் தற்போது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இந்தியா ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது வல்லரசு நாடாக உயர்ந்துள்ளது. The Asia Power of Index 2024 என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி என்ற நிறுவனமானது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியலை சமாளிக்கும் வல்லரசு நாடுகளின் பட்டியலைத் தயாரித்தது.
இந்தப் பட்டியலில் 27 நாடுகளில் தன்னிறைவு பெற்ற 8 அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவம், கலாச்சாரம், பொருளாதாரம், அண்டை நாடுகள் உறவு, பின்னடைவிலிருந்து மீளும் திறன் ஆகிய முக்கிய அம்சங்களும் அடங்கும். அதன்படி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளது.
கடந்த முறை இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் தற்போது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியா ஒருபடி முன்னேறி 3-வது இடத்தினைப் பிடித்துள்ளது. மேலும் 5, 6 ஆகிய இடங்களில் ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. மேலும் தென்கொரியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
சுமார் 150 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா அனைத்தையும் தன்னிறைவு செய்து அடுத்தடுத்து உலக அரங்கில் வல்லரசாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.