இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான நீண்டகால வர்த்தக பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த முறை களமிறங்கியுள்ள இந்தியா, “இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும்” என்ற தெளிவான செய்தியை பிரஸ்ஸல்ஸுக்கு அனுப்பியுள்ளது.
வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இந்தக் கோரிக்கையை மேலும் தீவிரப்படுத்த, இம்மாத இறுதியில் பிரஸ்ஸல்ஸுக்கு பறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை ஐரோப்பாவிலேயே தங்கியிருக்க இந்திய பேச்சுவார்த்தை குழுவுக்கு டெல்லி உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் மையத்தில் இருப்பது “உற்பத்திக்கான விதிகள்” என்ற கேள்விதான். ஒரு பொருள் எவ்வளவு சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை இந்த விதிகள் தீர்மானிக்கின்றன.
மூன்றாவது நாட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், இந்தியா வழியாக சலுகைகளை அனுபவிப்பதை தடுக்க, ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான உற்பத்தி விதிகளை கோருகிறது.
இந்தியா அதிக நெகிழ்வுத்தன்மையை கோருகிறது. மிக கடுமையான விதிகள், இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறனைப் பாதிக்கும் என்று அது வாதிடுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான அமெரிக்காவிடம் இருந்து சமீபத்தில் புதிய பிரச்சனைகள் தலைதூக்கியுள்ள நிலையில், இந்த ஐரோப்பிய ஒப்பந்தத்தின் அவசரம் இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களின் மீது 50% சுங்க வரிகளை விதித்தார். இதுபோன்ற சவால்களை சமாளிக்க மற்ற முக்கிய பொருளாதாரங்களுடன் விரைவாக ஒப்பந்தங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தை புதுடெல்லிக்கு ஏற்படுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் கோடி வர்த்தகத்திற்கு பங்களிக்கிறது, இது இந்தியாவின் உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 10% ஆகும்.
ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஐரிஷ் விஸ்கி உற்பத்தியாளர்கள், பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் உற்பத்திக்கான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்று கோருகின்றனர். வெறுமனே பாட்டிலில் அடைக்கும் இடத்தின் அடிப்படையில் அங்கீகாரம் தரக் கூடாது என்கிறார்கள். வெளிநாட்டு மதுபானங்கள் மறைமுக வழிகளில் நுழைவதை தடுக்க, ஒரு தயாரிப்பில் உள்ள இந்திய அல்லாத மூலப்பொருள் 5% மட்டுமே இருக்க வேண்டும் என்று இந்திய பானத் துறையும் வலியுறுத்துகிறது.
பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் இல்லாததால், ஐரோப்பிய துறைமுகங்களில் இந்திய உணவு மற்றும் விவசாய பொருட்கள் மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உள்ளாகின்றன. இது செலவுகளை அதிகரிப்பதோடு, அனுமதி வழங்குவதையும் தாமதப்படுத்துகிறது.
தீர்வு வரிகள் முதல் டிஜிட்டல் வர்த்தகம், தகராறு தீர்வு வரை 23 கொள்கை வரம்புகளை உள்ளடக்கிய 14 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர் சபின் வாண்ட் மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழுவும் இப்போது பேச்சுவார்த்தைகளை அரசியல் மட்டத்திற்கு உயர்த்தியுள்ளனர்.
இரு தரப்பிற்கும் டிசம்பர் மாதத்திற்கு முன் ஒரு பரந்த ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமானால், இது பொருட்கள், சேவைகள், முதலீடுகள், அறிவுசார் சொத்து மற்றும் நிலைத்தன்மை தரநிலைகளை உள்ளடக்கிய இந்தியாவின் மிக விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும்.
ஜவுளித்துறை போன்ற துறைகள் இந்த பேச்சுவார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்கின்றன. இந்த ஒப்பந்தம் மூலம் சுங்க வரிகள் குறைந்தால், இந்தியா உலகின் விருப்பமான குறைந்த கார்பன் உற்பத்தி மையமாக மாறக்கூடும் என்று நிறுவனங்கள் கருதுகின்றன. வாஷிங்டனின் சமீபத்திய வரிகள், மேற்கத்திய நாடுகளுடன் எந்தவொரு கூட்டுறவிற்கும் உத்தரவாதம் இல்லை என்பதை டெல்லிக்கு உணர்த்தியுள்ளது. எனவே, இந்திய பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒரு முடிவை எட்டும் வரை தாய்நாடு திரும்ப மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
