இன்றைக்கு உலக ஊடகங்களின் தலைப்பு செய்தியே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தகப் போர் மற்றும் அதற்கு இந்திய அரசு அளிக்கும் பதிலடி குறித்து தான் என்பது உலக அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் இந்தியாவை குறிவைத்து ஏற்படுத்திவரும் வர்த்தக அழுத்தங்களுக்கு, இந்தியாவின் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் எவ்வாறு பதிலடி கொடுக்கின்றன என்பதை சர்வதேச அரசியல் வல்லுனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் ஒரு வர்த்தகப் போரை தொடங்கியுள்ளார். இதன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையே பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. ட்ரம்ப் நிர்வாகம், “இந்தியாவின் பொருளாதாரம் இறந்து போன நிலையில் (dead economy) உள்ளது, இந்தியாவின் அரசாங்கம் சில பணக்காரர்களுக்கு மட்டுமே நன்மை செய்கிறது, இதனால் ஏழைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது” என்ற ஒரு பிம்பத்தை உலக அளவில் உருவாக்க முயற்சிக்கிறது. குறிப்பாக, ட்ரம்பின் ஆலோசகரான பீட்டர் நவாரோ போன்றோர், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அதன் கொள்கைகள் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
இந்த அழுத்தங்களுக்கு இந்தியா பின்வாங்காமல், தனது இறையாண்மையையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்து வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோருடன் நெருங்கி பழகியதும், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு புதிய ஆசிய அணி உருவாகிறது என்ற எண்ணத்தை அமெரிக்க ஊடகங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா சத்தமில்லாமல் பலமுனைகளில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்று, இந்திய மக்களுக்கு நேரடியாக நன்மை பயக்கும் விதத்தில் ஜிஎஸ்டி-யில் மாற்றங்களை கொண்டு வந்தது. இது சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு நிலையான, வலுவான பொருளாதாரமாக உள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு செயல்.
டிரம்பின் ஒரு முக்கிய குற்றச்சாட்டு, இந்திய அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்பது. இந்த வாதத்தை உடைக்கும் விதத்தில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சாமானிய மக்களுக்கான நிவாரணங்களை வழங்கியுள்ளன.
புற்றுநோய் போன்ற அரிதான நோய்களுக்கான மருந்துகளின் ஜிஎஸ்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சுகாதார பாதுகாப்பு சேவைகளுக்கான ஜிஎஸ்டி பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் புத்தகங்கள், கிரேயான்ஸ், மற்றும் பிற எழுதுபொருட்களுக்கான ஜிஎஸ்டி 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு பெரிய நிம்மதியை தருகிறது.
குளிர்சாதனப் பெட்டி, ஸ்மார்ட் டிவி, டிஷ்வாஷர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசன அமைப்புகள், ஸ்பிரிங்ளர்கள் மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கிறது.
இதே நேரத்தில், இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது. புகையிலை, பான் மசாலா மற்றும் கார்பனேட்டட் பானங்கள் (உதாரணம்: கோகோ-கோலா) மீதான வரி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மக்களுக்கு நன்மை செய்வதுடன், அமெரிக்காவை சேர்ந்த கோகோ-கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பெரிய அடியாக அமைந்துள்ளது. கடந்த 2024-ல் கோகோ-கோலா நிறுவனம் இந்தியாவில் இருந்து மட்டும் ரூ.14,000 கோடி வருமானம் ஈட்டியது. இந்த வரி உயர்வு, அமெரிக்க நிறுவனத்தின் லாபத்தை குறைத்து, இந்திய மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
இந்த வரி உயர்வு, சீனாவின் டிக்-டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்கு இணையாக பார்க்கப்படுகிறது. எப்படி டிக்-டாக் தடை சீன பொருளாதாரத்திற்கு ஒரு அடியாக அமைந்ததோ, அதேபோல, கோகோ-கோலா மீதான வரி உயர்வு அமெரிக்காவிற்கு ஒரு மறைமுகமான அடியாகும்.
டிரம்பின் வர்த்தக போர், இந்திய பொருளாதாரத்தை அசைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புப்படி, 2028-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், இந்திய பொருளாதாரம் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதிலும், நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் திறனை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்பதை காட்டுகிறது.
அமெரிக்காவில் இருந்து வரும் அழுத்தங்கள், அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தை போல, இந்திய பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய முதலீட்டாளர்கள், ட்ரம்ப் போன்றோரின் அறிக்கைகளுக்கு பயப்படாமல், இந்தியாவின் பொருளாதாரத்தின் வலிமையை நம்புகின்றனர்.
இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், உள்நாட்டு மக்களுக்கு பிரதமர் அளிக்கும் ஒரு பரிசு மட்டுமல்ல. அது, சர்வதேச அரங்கில், “நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல; நாங்கள் திறமையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்” என்ற ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது. இந்திய பொருளாதாரம், சர்வதேச அழுத்தங்களுக்கு பணியாமல், தனது சொந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முன்னேறி கொண்டிருக்கிறது என்பதை அமெரிக்கா உள்பட உலக நாடுகள் தற்போது புரிந்து கொண்டுள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
