அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50% வரி விதித்ததை அடுத்து, இந்திய வர்த்தக வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அமெரிக்க பொருட்களுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘தற்சார்பு இந்தியா’ என்ற முழக்கம், இந்த உணர்வை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் புறக்கணிப்பு பிரசாரம்
அமெரிக்காவின் மெக்டொனால்ட்ஸ், கோகோ-கோலா, அமேசான், ஆப்பிள் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்த எதிர்ப்பு அவர்களுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.
இந்தியாவின் முக்கியத்துவம்:
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது. உதாரணமாக, மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பிற்கு உலகிலேயே அதிக பயனர்கள் இருப்பது இந்தியாவில்தான். டோமினோஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் மற்ற நாடுகளைவிட அதிக உணவகங்கள் உள்ளன.
பிரதமர் மோடி, பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “இந்திய நிறுவனங்கள் உலகிற்கான தயாரிப்புகளை உருவாக்குகின்றன. ஆனால், இப்போது இந்தியாவின் தேவைகளுக்கு நாம் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம் இது” என்று பேசியுள்ளார். அவர் எந்த நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது பேச்சு அமெரிக்க பொருட்களுக்கு எதிரான உணர்வை மேலும் தூண்டியுள்ளது.
பா.ஜ.க.வுடன் தொடர்புடைய சுதேசி ஜாக்ரான் மஞ்ச் என்ற அமைப்பு, அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. அவர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம், வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக இந்திய பிராண்டுகளை பயன்படுத்தும்படி ஒரு பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், டெஸ்லா நிறுவனம் தனது இரண்டாவது ஷோரூமை டெல்லியில் திறந்துள்ளது. இந்த திறப்பு விழாவில் இந்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஒருவேளை டொனால்ட் டிரம்பை எதிர்ப்பவர் எலான் மஸ்க் என்பதால் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும், இது டிரம்புக்கு மேலும் கடுப்பேத்தும் நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
