மெடிக்க லீவ் எடுக்க தகுந்த ஆவணங்கள் தாக்கல் செய்தபோதிலும் வேலையில் இருந்து நீக்கிய உத்தரவால் ICICI வங்கி ஊழியர் ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்பவர் மெடிக்கல் லீவ் எடுத்தார் மற்றும் அதற்கான அனைத்து ஆவணங்களையும் ICICI வங்கிக்கு வழங்கியிருந்தார். ஆனால், திடீரென அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவருடன் மட்டும் அல்லாமல், 2014 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பல ICICI வங்கி கிளைகளில் இதுபோன்று 782 சம்பவங்கள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
பல முன்னாள் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். சிலர் முறையாக மெடிக்கல் லீவ் எடுத்தும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தும், திடீரென வேலைநீக்கம் அல்லது இடமாற்றம் செய்யப்பட்டதாக பதிவு செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், பிரசவத்திற்காக விடுப்பு எடுக்க முயன்றபோது, கட்டாயமாக ராஜினாமா செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்ததாக கூறியுள்ளார். அதேபோல், ஒருவர் வங்கியில் நடந்த ஊழலை புகார் செய்ததற்காக எந்த விளக்கமும் இல்லாமல் வேலைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், யோகேஷ் மற்றும் விவேக் ஆகிய இரண்டு ICICI ஊழியர்கள், கடுமையான வேலை பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட பின்னர் தான், ICICI வங்கி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் குரல் கொடுக்கத்தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக வங்கி ஊழியர் சங்கத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ICICI வங்கியின் இந்த நடவடிக்கைகளை மத்திய தொழிலாளர் துறை ஆணையாளர் சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழியர்கள் மீது மனிதாபிமானம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவர்கள் அநியாயமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ராகுல் காந்தியிடம் வங்கி ஊழியர்கள் முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை ICICI வங்கி தரப்பில் எந்த அதிகாரியும் விளக்கம் அளிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.